புதுடெல்லி: 17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டியில் மணிப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியின் 11 வீரர்களும் பந்து வீசி அசத்தல் சாதனையை அரங்கேற்றி உள்ளனர். சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 போட்டிகள், மும்பை, இந்தூர், ராஜ்கோட், ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ஆயுஷ் பதோனி தலைமையிலான டெல்லி அணி, ரெக்ஸ் சிங் தலைமையிலான மணிப்பூரை எதிர்கொண்டது.
முதலில் ஆடிய மணிப்பூர், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 120 ரன் எடுத்தது. பின் களமிறங்கிய டெல்லி அணி, 18.3 ஓவரில் 6 விக்கெட் மட்டுமே இழந்து 124 ரன் குவித்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மணிப்பூர் அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கியபோது, டெல்லி அணியின் 11 வீரர்களும் பந்து வீச்சுக்கு பயன்படுத்தப்பட்டு, டி20 போட்டியில் அசத்தல் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
டெல்லி அணியின் திக்வேஸ் 2, ஹர்ஷ் தியாகி 2, பிரியன்ஷ் ஆர்யா 1, ஆயுஷ் சிங் 1 விக்கெட் வீழ்த்தினர். டெல்லியின் 11 வீரர்களும் பந்து வீசிய போதிலும், மணிப்பூர் அணி வீரர்களை ஆல் ஆவுட் செய்ய முடியவில்லை. இதற்கு முன் நடந்துள்ள எந்தவொரு டி20 போட்டியிலும் 9 பவுலர்களுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டதில்லை. அதேசமயம், கடந்த 2002ல், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சவுரவ் கங்குலி தலைமையில் மோதிய இந்திய அணியின் 11 வீரர்களும் பந்து வீச்சுக்கு பயன்படுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.