செய்யூர்: பவுஞ்சூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதி, விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த பவுஞ்சூர் அருகே கீழகண்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (45). விவசாயி. இவர் நேற்று வீட்டில் இருந்து தனது ஹோண்டா டியோ இருசக்கர வாகனத்தில் பவுஞ்சூர் பஜாருக்கு சென்றுவிட்டு பகல் 2:30 மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
விழுதமங்கலம் கூட்ரோடு அருகே வந்தகொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் பவுஞ்சூரில் இருந்து வேகமாக வந்த டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை அறிந்த லாரி ஓட்டுநர் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தலைமறைவானார். உடனடியாக அங்கு கூடிய பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற அணைக்கட்டு போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.