*சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடிவு
காட்டுமன்னார்கோவில் : கீழணையில் திறக்கப்பட்ட தண்ணீர் வீராணம் ஏரியை வந்தடைந்தது. சென்னையில் குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அமைந்துள்ள வீராணம் ஏரிக்கு கடந்த 2 மாதங்களாக தண்ணீர் வரத்து இல்லாத காரணத்தாலும் வெயிலின் தாக்கத்தாலும் முற்றிலும் வறண்டு பொட்டல் காடாக காட்சியளித்தது.
இதனால் வீராணம் ஏரி பாசனத்தை நம்பியுள்ள விவசாய நிலங்களுக்கு போதிய தண்ணீர் வரத்து இல்லாமல் போனது. மேலும் புதிய வீராணம் திட்டம் மூலம் சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரும் செல்லவில்லை. இதன் காரணமாக வெற்றிலை, கரும்பு, கத்தரி, மிளகாய் போன்ற விதை பயிருக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தனியார் மின் மோட்டார் வேண்டி எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த 17ம் தேதி மேட்டூரணை திறக்கப்பட்டு, 2 ஆயிரம் கன அடிகள் நீர் வரத்து இருந்தன. அது பல நிலைகளை தாண்டி தஞ்சை மாவட்டம் கீழணைக்கு 25ம் தேதியான நேற்றைய முன்தினம் 500 கனஅடிகளாக வந்தன. கீழணைக்கு வந்த தண்ணீரில் 200 கன அடிகள் வீராணம் ஏரிக்காக வடவாற்றிலும், 100 கன அடிகள் இதர கசிவுகள் மூலமாக கொள்ளிடம் ஆற்றுக்கும், மீதமிருந்த சுமார் 300 கனஅடிகள் கொள்ளிடம் ஆற்றின் வழியாக பொதுப்பணித் துறையினரால் கடலுக்கு அனுப்பப்படுகிறது.
இதில் வடவாற்றின் வழியாக தொடர்ந்து வீராணம் ஏரிக்கு 4 நாட்களில் 200 கன அடிகளாக வரும்பட்சத்தில், வீராணம் ஏரி, கடல் மட்டத்தில் இருந்து 3 அடிகள் வரை உயரும். இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி மீண்டும் தொடரும். நேற்றைய நிலவரப்படி 160 கன அடிகள் தண்ணீர் வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக அனுப்பப்பட்டு வருகின்றன.