ஊட்டி : கோடை சீசனுக்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் நாற்று உற்பத்தியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஆண்டு தோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் குளு, குளு காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு படையெடுப்பது வழக்கம். இந்த சமயங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், அவர்களை மகிழ்விக்கும் பொருட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.
இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், அவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை தாவரவியல் பூங்காவில் பல வகையான மலர்கள் பூத்துக் குலுங்கும் வகையில் பல லட்சம் மலர் செடிகள் முன்னதாகவே நடவு செய்யப்படும்.
இதற்காக, ஆண்டுதோறும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நாற்று உற்பத்தி செய்யப்படும். நாற்றுகள் உற்பத்தியானவுடன் டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் நடவு பணிகள் துவங்கும். பின், இந்த மலர் செடிகள், ரகம் மற்றும் பூக்கும் காலத்திற்கு ஏற்றவாறு மார்ச் மாதம் வரை நடவு பணிகள் நடக்கும்.
இந்த முறை, சென்னையில் கடந்த மாதம் மலர் காட்சி நடத்தப்பட்டது. இதற்காக தாவரவியல் பூங்காவில் பல லட்சம் தொட்டிகள் தயார் செய்யப்பட்டது. இதனால், கோடை சீசன் காண நாற்று உற்பத்தி மற்றும் நடவு பணிகளில் தாமதம் ஏற்பட்டது.
தற்போது, நாற்று உற்பத்தி மற்றும் நடவு பணிகள் நடந்து வருகிறது. பூங்காவில் உள்ள நர்சரி பாத்திகளில் நாற்று உற்பத்தியில் தோட்டக்கலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பல லட்சம் மலர் நாற்றுக்கள் உற்பத்தி செய்யும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.
இதற்கான விதைப்பு பணிகள் தற்போது தாவரவியல் பூங்கா நர்சரியில் நடந்து வருகிறது. நாற்று உற்பத்தியான உடன் அவை பூங்காவில் உள்ள பல்வேறு பாத்திகளிலும் நடவு செய்யப்பட உள்ளது. மேலும், பல ஆயிரம் தொட்டிகளிலும் இந்த மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட உள்ளது.