Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தாவரப்பூங்கா, இசை நீரூற்று என அனைத்து வசதிகளுடன் புதுப்பொலிவு பெறும் பென்னிகுக் மணிமண்டபம்

*மானிய கோரிக்கையில் அறிவிக்க வாய்ப்பு

*கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் தகவல்

கூடலூர் : லோயர்கேம்பில் தாவரப்பூங்கா, இசைநீரூற்று என அனைத்து வசதிகளுடன் பென்னிகுக் மணிமண்டபத்தினை சுற்றுலாத்தலமாக்குவதற்கான அறிவிப்பை மானிய கோரிக்கையின் போது வெளியிட வேண்டும் என அமைச்சருக்கு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளதாக கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.தென்மாவட்டத்தில் 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக பெரியாறு அணை விளங்கி வருகிறது.

இந்த பெரியாறு அணையை கட்டிய கர்னல் பென்னிகுக் நினைவை போற்றும் வகையில் தேனி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள கேரளா எல்லையை ஒட்டிய லோயர் கேம்பில் வெண்கலத்திலான அவரது முழுஉருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ஜான் பென்னிகுக் பிறந்தநாளான ஜன.15ம் தேதி தமிழ்நாடு அரசு விழாவாக இங்கு கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த பல ஆண்டுகளாக லோயர் கேம்பில் உள்ள பென்னிகுக் மணிமண்டபத்தை விரிவுபடுத்தப்பட்ட சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்த வண்ணம் இருந்தது. இதுகுறித்த தினகரன் நாளிதழில் கடந்த மார்ச் 10ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது.செய்தியில் பேட்டியின் போது, புதுப்பொலிவுடன் சுற்றுலாத்தலமாக மாற்றுவது குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதோடு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும் சந்தித்து எடுத்துரைப்பேன்.

மேலும், சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போதும் சுற்றுலாத்துறை சம்பந்தமான கேள்வி நேரத்தின் போதும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் பென்னிகுக் மணிமண்டபத்தை தமிழக அரசின் சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வேன் என கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் சுற்றுலாத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வேண்டுகோள் கடிதத்தை வழங்கியுள்ளார். அந்த கடிதத்தில், ‘‘கம்பம் லோயர் கேம்பில் தியாக சீலர் பென்னிகுக் மணிமண்டபம் உள்ளது.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்ற வகையில் தாவரப் பூங்கா அமைப்பது, பென்னிகுக் பயன்படுத்திய பொருட்கள் சேகரிக்கப்பட்டு அருங்காட்சியகம் அமைத்தல், ஒலி, ஒளியுடன் கூடிய இசை நீரூற்று,

பென்னிகுக் வரலாற்றை அனைவரும் அறிகின்ற வகையில் 3டி கண்ணாடி வசதியுடன் குறும்படம் காணும் வகையில் கூடிய கலையரங்கம், பென்னிகுக் மணிமண்டபத்திலிருந்து இருந்து சுருளியாறு மின் உற்பத்தி செய்யுமிடத்திற்கு(2கிமீ) சென்று வர சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பயணம், இயற்கை வளங்களை சுற்றுலாப் பயணிகள் ரசித்துப் பார்க்கின்ற வகையில் தொலைநோக்கி வசதி, சிறுவர் பூங்கா, உணவகம் மற்றும் தங்கும் விடுதி ஆகிய பணிகளை 2025-2026ம் ஆண்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் 2025-2026ம் ஆண்டு சுற்றுலாத்துறை மானிய கோரிக்கையில் அறிவிப்பு செய்ய வேண்டும்’’ என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எம்எல்ஏ ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘‘ஏற்கனவே அமைச்சரிடம் நேரடியாக கூறிய நிலையில் தற்போது கடிதம் மூலமும் வேண்டுகோள் விடுத்துள்ளேன். விரைவில் சுற்றுலா துறையின் மானிய கோரிக்கையின் போது லோயர் கேம்பில் உள்ள பென்னிகுக் மணிமண்டபத்தை விரிவுபடுத்தப்பட்ட சுற்றுலாத்தலமாக மாற்றி புதுப்பொலிவு பெறுவதற்கான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’’என்றார்.