திருவனந்தபுரம்: குழந்தைக்கு யார் பெயர் வைப்பது என்பதில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து வேறு வழியின்றி அவர்களது 4 வயது பெண் குழந்தைக்கு கேரள உயர்நீதிமன்றமே பெயர் வைத்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் பாலகங்காதரன் நாயர். இவரது மனைவி பிரியா. கடந்த நான்கு வருடங்களுக்கு முன் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பதற்கு முன்பே இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் குழந்தைக்கு பெயர் வைப்பதிலும் பிரச்னை ஏற்பட்டது. கணவன் கூறும் பெயர் மனைவிக்கு பிடிக்காது. மனைவி கூறும் பெயர் கணவனுக்கும் பிடிக்காது. இதன் காரணமாக குழந்தைக்கு 4 வயது ஆகும் வரை இவர்கள் பெயர் வைக்கவில்லை.
இதற்கிடையே பிரியா குழந்தையுடன் தன்னுடைய வீட்டுக்கு சென்று விட்டார். குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்கிய போதிலும் அதில் பெயர் குறிப்பிடவில்லை. இந்நிலையில் பிரியா கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னுடைய மகளை பள்ளியில் சேர்ப்பதற்காக சென்றார். ஆனால் பிறப்பு சான்றிதழில் பெயர் இல்லாததால் பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மகளின் பெயரை பதிவு செய்வதற்காக ஆலுவா பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றார். ஆனால் கணவன், மனைவி இருவரும் நேரில் வந்தால் மட்டுமே குழந்தையின் பெயரை பதிவு செய்ய முடியும் என்று பதிவாளர் கூறிவிட்டார். இதைத்தொடர்ந்து பிரியா குடும்ப நல நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். தன்னுடைய மகளுக்கு புண்யா நாயர் என்று பெயர் சூட்ட விரும்புவதாகவும், அதற்கு சம்மதிக்க தன்னுடைய கணவனுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் தன்னுடைய மகளுக்கு பத்மா நாயர் என்று தான் பெயரிட வேண்டும் என்று பாலகங்காதரன் நீதிமன்றத்தில் கூறினார். தொடர்ந்து இருவரும் ஆலுவா நகரசபை செயலாளர் முன் ஆஜராகி பிரச்னையை தீர்த்துக்கொள்ள குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதன் பிறகும் இந்தப் பிரச்னையில் தீர்வு ஏற்படவில்லை. இதையடுத்து பிரியா கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சிறப்பு சட்டத்தை பயன்படுத்தி குழந்தைக்கு நீதிமன்றமே பெயர் வைக்கும் என உத்தரவிட்டார். நீதிபதி தன்னுடைய உத்தரவில் கூறியது: குழந்தைக்கு சமூகத்தில் பெயர் என்பது மிகவும் முக்கியமானதாகும். குழந்தைகளை பாதுகாக்கும் ‘பேரன்ட்ஸ் பேட்ரியா’ என்ற சட்டத்தை பயன்படுத்தி இந்த குழந்தைக்கு நீதிமன்றமே பெயர் வைக்க தீர்மானித்துள்ளது. தற்போது இந்தக் குழந்தை தாயின் பாதுகாப்பில் உள்ளது.
எனவே தாய் தெரிவித்துள்ள பெயரையும், அதன் பின்னால் தந்தை பெயரையும் சேர்த்து புண்யா பாலகங்காதரன் நாயர் அல்லது புண்யா பி. நாயர் என இந்தக் குழந்தைக்கு பெயர் வைக்கப்படுகிறது. இந்தப் பெயரை பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம். பதிவாளர் இந்தப் பெயரை ஏற்றுக்கொள்ள வேண்டும். குழந்தையின் பெயரை பதிவு செய்யும்போது கணவன், மனைவி இருவரும் நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை. யாராவது ஒருவர் சென்றால் போதும். இவ்வாறு நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.