புதுடெல்லி: வீட்டுக்கடன் விஷயத்தில் இஷ்டம் போல் செயல்படும் வங்கிகளால் கடன் வாங்கியவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பால் கடன் வாங்கியவர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். பெரும்பாலான வங்கிகள் ஃபளோட்டிங் ரேட் கடன்கள், ஃபிக்ஸட் ரேட் கடன்கள், செமி ஃபிக்ஸட் ரேட் கடன்கள் ஆகிய மூன்று வகைகளில் வீட்டுக் கடன் வழங்குகின்றன. இந்த மூன்று வகைகளில் பெரும்பாலானோர் ஃப்ளோட்டிங் ரேட் கடன்களைத் தான் வாங்குகின்றனர். ஃப்ளோட்டிங் ரேட் கடன்கள் என்பது, கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி ஏற்றும்போது, கடன்களுக்கான வட்டி உயரும். வட்டி விகிதங்களை இறக்கும்போது, கடன்களுக்கான வட்டி குறையும். ஆனால், வட்டி விகிதம் ஏறும்போது வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் தானாக வங்கிகள் ஏற்றிவிடும். ஆனால், இறங்கும்போது பெரும்பாலான வங்கிகள் தானாகவே குறைப்பது கிடையாது.
உதாரணத்துக்கு, சந்தையில் 0.50% வட்டி குறைந்தால், வீட்டுக் கடனில் வங்கிகள் வட்டியைக் குறைப்பது 0.05% – 0.10% என்ற அளவுக்கு மட்டுமே இருக்கும். இவ்வாறு செய்வதால் வங்கிகளின் நிகர வட்டி மார்ஜின் உயரும்; அதனால் லாபங்களும் கூடும். ஆகவே, வங்கிகள் ஃப்ளோட்டிங் ரேட் அடிப்படையிலான கடனை வாடிக்கையாளர்களுக்குத் தருவதில் ஆர்வமாக உள்ளன. இந்நிலையில் கடந்த 12 மாதங்களில் மட்டும் ஃப்ளோட்டிங் ரேட் முறையில் வீட்டுக் கடன் வாங்கியவர்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வந்தனர். அவர்களுக்கான வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டதால் சிரமங்களை சந்தித்தனர். வீட்டுக் கடன் பெற்றவரிடம் முறையான அறிவிப்பு கொடுக்காமல் அல்லது அவர்களின் ஒப்புதல் இல்லாமல் வட்டி விகிதத்தை ஏற்றியும், வீட்டுக் கடனை திருப்பி செலுத்துவதற்கான காலகெடுவை அதிகரிக்கும் வேலைகளை வங்கிகள் செய்து வந்தன.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு புகார்கள் சென்றன. அதனால் ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஃப்ளோட்டிங் ரேட் கடனுக்கான வட்டி விகிதங்கள் உயரும் போது, வீட்டுக் கடன் வாங்கியவர்களின் மாதாந்திர தவணை தொகை (இஎம்ஐ) உயர்வு மற்றும் கடன் தவணை காலக்கட்டம் நீடிப்பு ஆகியவற்றை எதிர்கொண்டனர். இவ்விசயத்தில் வங்கிகள் தன்னிச்சையான நடைமுறைகளைப் பின்பற்றுவதாக புகார்கள் வந்தன. கடன் பெற்றவர்களின் இஎம்ஐ-களை உயர்த்துவதன் மூலமாகவோ அல்லது காலகட்டத்தை நீட்டிப்பது தொடர்பாக எவ்வித ஒப்புதலையும் வங்கிகள் பெறவில்லை. எனவே ரிசர்வ் வங்கி வகுத்துள்ள புதிய விதிகளின்படி, கடன் வழங்கும் வங்கிகள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும். வாடிக்கையாளருக்கு கடன் கொடுக்கும் காலகட்டத்தில், கடனுக்கான பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தில் ஏற்படும் மாற்றத்தின் தாக்கம், இஎம்ஐ, கடன் தவணை காலம், இரண்டிலும் ஏற்படும் மாற்றங்கள் குறித்து வங்கிகள் கடனை வாங்கியவர்களிடம் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.
வட்டிவிகிதம் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், இஎம்ஐ அதிகரிப்பு மற்றும் தவணைக்காலம் நீடிப்பு தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட வேண்டும். அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இஎம்ஐ, தவணை காலம் குறித்த விபரங்களில் மாற்றம் செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களும் தங்களது விருப்பத்திற்கான விருப்ப காலத்தை தாழ்த்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு ரிசர்வ் வங்கியானது மாதாந்திர வட்டி விகிதங்களை அதிகரிக்கும் போதெல்லாம், தவணை காலத்தை நீடிக்கப்படுகிறது. 20 வருட தவணை கால கடனை 42 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் வகையில் மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் வங்கிகளின் நிகர வட்டி மார்ஜன் உயரும் என்பதால், வங்கிகள் தங்கள் இஷ்டபடி வட்டி விகிதங்களை உயர்த்தியும், தவணை காலத்தையும் உயர்த்தி வருகின்றன.
2022 ஏப்ரலில் 6.7%-க்கு எடுக்கப்பட்ட 20 ஆண்டு கால கடனானது, நடப்பாண்டு இந்த மாத (ஆகஸ்ட்) வட்டி விகிதம் 9 சதவீதமாகவும், திருத்தப்பட்ட தவணை காலம் 42 ஆண்டு 3 மாதமாகவும், கடனை திருப்பி செலுத்தும் தவணை காலம் 284 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கடன் வாங்கியவர்களை ெபரிதும் பாதித்துள்ளது. தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய அறிவிப்பால், வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு சற்று நிம்மதி கிடைத்துள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.