திருமலை: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதிக்குட்பட்ட நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் திம்மராயப்பா(31), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சிரிஷா(25). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். குடும்ப செலவிற்காக திம்மராயப்பா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகியும் பைனான்சியருமான முனிகண்ணப்பா என்பவரிடம் ரூ.80,000 கடன் வாங்கினாராம்.
பல மாதங்கள் ஆகியும் கடனை திருப்பி செலுத்தவில்லை. பணத்தை திருப்பி தரும்படி கேட்டபோது, திம்மராயப்பா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலைமறைவாகிவிட்டாராம். இதனால் சிரிஷா கூலி வேலைகளுக்கு சென்று தனது பிள்ளைகளை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற மகனை நேற்று முன்தினம் மாலை சிரிஷா அழைத்துக்கொண்டு வீட்டுக்கு நடந்து சென்றார்.
அப்போது அவ்வழியாக வந்த முனிகண்ணப்பாவும் அவரது மனைவியும், பணத்தை கேட்டு சிரிஷாவை திடீரென இழுத்துச்சென்று அங்குள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்து சரமாரி தாக்கினாராம். இதை சிலர் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தார்கள். இது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து பொதுமக்கள் குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிரிஷாவை மீட்டனர். இதற்கிடையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சித்தூர் மாவட்ட எஸ்பி மணிகண்டாவை போனில் தொடர்பு கொண்டு, இதுபோன்ற சம்பவங்களில் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரவிட்டார். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து முனிகண்ணப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது மனைவியை தேடி வருகின்றனர்.
* முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.5 லட்சம் நிதி உதவி
மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்ட சிரிஷாவிடம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று செல்போனில் பேசி நடந்த விவரங்களை கேட்டறிந்தார். அவருக்கு ஆறுதல் கூறிய முதல்வர், அவருக்கு ரூ.5 லட்சம் நிதி உதவியாக வழங்குவதாக கூறி அவரின் குழந்தைகளின் கல்விக்கு அரசு பொறுப்பேற்கும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதியளித்தார்.