‘அவங்ககிட்டே ஒட்டு, ஒறவு வைக்கக்கூடாது’ பார்டரை தாண்டி யாராவது போனீங்க...? மதுரை தவெகவில் மாசெக்கள் ‘டிஷ்யூம்... டிஷ்யூம்...’
தவெக கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது பல்வேறு பகுதிகளுக்கு மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் செயலாளர்கள் நியமனமின்றியே கட்சி நடத்தினர். அக்கட்சியில் எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு பதவி வழங்குவோம் என கூறினர். அந்த காலக்கட்டம் வரையில் தவெகவினருக்கு கட்சியில் தெரிந்த முகம் என்றால் விஜய்க்கு அடுத்தபடியாக புஸ்ஸி ஆனந்த் மட்டுமே. இதன்பிறகே ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், அருண்ராஜ் ஆகியோரும் இவர்களுக்கு அடுத்தபடியாக செங்கோட்டையனும் கட்சிக்குள் வந்து இணைந்தனர்.
அதே நேரம் விஜய் மக்கள் இயக்கத்தில் தீவிரமாக இருந்த பலர் அரசியல் கட்சியில் அடையாளம் காணப்படாதவர்களாய் தவித்தனர். மாநிலம் முழுவதும் சிலர் மட்டுமே கட்சியின் பொறுப்புக்கு வந்தனர். அந்த வகையில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் தங்கப்பாண்டி, நீண்டகாலமாக மன்றத்தில் இருந்தவர். மன்றத்தில் சுழன்றவரால் கட்சியில் ஜொலிக்க முடியவில்லை. சமீபத்தில் பெண் நிர்வாகி ஒருவர், தன்னிடம் பணம் பெற்றும் பதவியை பறித்ததாக வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதே நேரம் வடக்கு மாவட்ட செயலாளராக இருக்கும் கல்லாணை என்பவர், பல்வேறு வழிகளில் தனக்கு குடைச்சல் தருவதாகவும், தன்னை கட்சியில் வளரவிடாமல் இடையூறு ஏற்படுத்துவதாகவும், எனது மாவட்டத்தையும் சேர்த்து தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் அவர் செயல்படுவதாக தங்கப்பாண்டி தனது ஆதரவாளர்களிடம் கூறி வருத்தப்படுகிறாராம்.
தனது மாவட்ட கட்டுப்பாட்டிற்குள் கட்சியினர் யாரும் கல்லாணை தரப்பிடம் எந்த ஒட்டும், உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது. மீறினால் நடக்கிறதே வேற என்கிற ரீதியில் பேசி வருகிறாராம். மாவட்ட செயலாளர்களிடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி அரசியல் தேர்தல் களத்தில் எதிரொலிக்கும் என்கின்றனர் தவெக கட்சியினர்.
