ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் வரும் செப். 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதி 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த புதன்று இரவு சுமார் 7 மணியளவில் கும்காடி பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து தீவிரவாதிகள் மீது வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு தொடங்கினார்கள். தீவிரவாதிகளும் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். நேற்று காலை வரை இந்த நடவடிக்கை நீடித்தது. வீரர்களின் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சம்பவ இடத்தில் இருந்து அவர்களது சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 2 ஏகே ரக துப்பாக்கிகள், பிஸ்டல், 4கையெறி குண்டுகள் மற்றும் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கர்னா செக்டாரில் புதனன்று இரவு 9 மணிக்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். வீரர்கள் இதற்கு தகுந்த பதிலடி கொடுத்தனர். இதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். அவனது சடலத்தையும் வீரர்கள் நேற்று காலை மீட்டனர். துப்பாக்கி சூடு நடந்த இரண்டு பகுதிகளிலும் வீரர்கள் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.