மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் கொண்ட கவாஸ்கர்-ஆலன் பார்டர் தொடரில் ஆட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் பெர்த் மைதானத்தில் நவ. 22-26 வரையும், 2வது டெஸ்ட் அடிலெய்ட்டில் பகலிரவு போட்டியாக டிச. 6-20, பிரிஸ்பேனில் 3வது டெஸ்ட் டிச.14-18, மெல்போர்னில் 4வது டெஸ்ட் டிச.26-30, சிட்னியில் கடைசி டெஸ்ட் ஜன.3-7ம் தேதி வரையும் நடைபெற உள்ளது. கடைசியாக நடந்த 4 தொடரையும் இந்தியாவே கைப்பற்றி உள்ளது. இதில், 2018-19, 20-21ம் ஆண்டுகளில் ஆஸி. மண்ணில் நடந்த தொடரையும் இந்தியாவே வென்று அசத்தியது.
ஆனால் இந்த முறை இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியா தீவிரமாக உள்ளது. இதற்கு தயாராகும் வகையில், ஸ்காட்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான ஒயிட்பால் (டி.20, ஒன்டே) போட்டிகளில் இருந்து கேப்டன் கம்மின்ஸ் விலகி உள்ளார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து கடந்த 18 மாதமாக தொடர்ந்து விளையாடி வருகின்றேன். இதனால் அடுத்த 8 வாரத்திற்கு நான் பந்துவீச போவதில்லை. என் உடல் தகுதியை நான் மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட போகின்றேன். அதன் பிறகு மீண்டும் கோடைகால கிரிக்கெட் சீசனுக்கு நான் தயாராக போகிறேன். இதன் மூலம் தொடர்ந்து ஒரே வேகத்தில் அதிக நேரம் என்னால் பந்துவீச முடியும். என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் கிட்டத்தட்ட அனைத்து தொடர்களையும் வென்று இருக்கின்றேன்.
ஆனால் இதுவரை பார்டர், கவாஸ்கர் தொடரை மட்டும் நான் வெல்லவில்லை. டெஸ்ட் அணியாக நாங்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றோம். சொந்த மண்ணில் நடக்கும் ஒவ்வொரு தொடரையும் கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்பது எங்கள் மனதில் உள்ளது. இந்திய அணி அனைத்து பார்மெட்டிலும் சிறப்பாக விளையாடுகிறது. நாங்கள் அவர்களுடன் நிறைய போட்டிகளில் ஆடி உள்ளோம். இந்திய வீரர்களை எங்களுக்கு நன்கு தெரியும். எனவே ஆஸ்திரேலிய அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் சிறப்பாக விளையாட வேண்டும், என்றார்.