சென்னை: அரசு பள்ளியில் பூட்டில் மலம் வைத்தது குறித்து கல்வித்துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். திருத்தணி அடுத்த மத்தூர் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியின் கதவின் பூட்டின் மேல் மர்ம நபர்கள் மனித கழிவுகளை நேற்றுமுன்தினம் பூசிவிட்டு சென்றனர். இதையடுத்து பள்ளிக்கு சென்ற ஆசிரியர்கள் வகுப்பறை பூட்டின் மீது மனித கழிவு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, பெற்றோர், மாணவர்களை வகுப்பறைக்கு அனுப்பாமல் நேற்று முன்தினம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, வருவாய் கோட்டாட்சியர் தீபா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முரளி, தாசில்தார் மதன், வருவாய் ஆய்வாளர் கமல் ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று நேற்று ஆய்வு செய்தனர். அங்கு போதுமான வகுப்பறைகள், கழிப்பறைகள் உள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும், கதவு மற்றும் பூட்டின் மீது மனிதகழிவை பூசியவர்கள் யார் என்பது குறித்து பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், பள்ளி தலைமை ஆசிரியர் சத்யா பூட்டின் மீது மனிதகழிவுகளை பூசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.