திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் போதெல்லாம், தமிழகத்தில் கல்வித்தரத்தை உயர்த்தும் பணிகளுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில் கல்வித்துறையில் பல மாற்றங்களை, ஏற்றங்களை கொண்டு வந்தார். தாய் எட்டடி என்றால், குட்டி 16 அடி பாயும் என்பது போல, கலைஞரை தொடர்ந்து, மாணவர்களின் கல்வித்தரம் உயர்வதற்கு பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். அதில் முதன்மையானது நான் முதல்வன் திட்டம்.
கடந்த 2022, மார்ச் மாதம் துவங்கிய திட்டம் தற்போது 3வது ஆண்டை தாண்டி வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர முடியாமல் தவித்த மாணவர்களை கண்டறிந்து உயர்கல்வி கற்க வழிவகுத்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் சுமார் 41 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர். மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியோடு, வேலைவாய்ப்பு பெறும் சூழலையும் ஏற்படுத்தி தருகிறது இத்திட்டம். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, உயர்தரமான பயிற்சியை இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் பெற்று வளர்ச்சி கண்டு வருகின்றனர்.
மேலும், ஜேஇஇ, போட்டித்தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்புகளுக்கான சிறப்பு பயிற்சியையும் வழங்கி, மாணவர்களை பட்டைத் தீட்டும் திட்டமாக நான் முதல்வன் விளங்குகிறது. பள்ளி படிப்போடு பெண்களின் கல்விக் கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடக்கூடாது என்று எண்ணிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘புதுமைப்பெண்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன்மூலம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பெண்களின் கல்வி இடை நிற்றல் வெகுவாக குறைந்துள்ளது. சுமார் 3.50 லட்சம் மாணவிகள் இதன்மூலம் பயனடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆணுக்கும், பெண்ணுக்கும் சம உரிமையை நிலைநாட்ட சொத்துகளில் சம பங்கு உரிமையை பெற்றுக் கொடுத்தது திமுக அரசு அல்லவா? அந்த வகையில் புதுமைப்பெண் போலவே தவப்புதல்வன் திட்டத்தை மாணவர்களுக்காக கொண்டு வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஏழ்மை சூழல் காரணமாக பட்ட மேற்படிப்பை தொடர முடியாத லட்சக்கணக்கான மாணவர்கள் இதன்மூலம் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை பெற்று, லட்சிய இலக்கை நோக்கி முன்னேறி வருகின்றனர். கடந்த 2022ம் ஆண்டு, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப். 15ம் தேதி, அரசுப்பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தை மதுரையில் அறிமுகப்படுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இதன்மூலம் காலை உணவு உண்ணாமல் பள்ளிக்கு சென்ற பல மாணவர்கள், உணவு அருந்தி உணர்வுப்பூர்வமாக கல்வி பயின்று வருகின்றனர். இதன்மூலம் தமிழக குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் 31 ஆயிரம் பள்ளிகளைச் சார்ந்த 17 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இந்த திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர். மேலும், கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்களும் வழங்கப்பட உள்ளது. ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்ைத முதல்வர் நேற்று முன்தினம் தொடங்கி வைத்திருக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 18 – 35 வயதுள்ள படித்த, வேலையில்லாத இளைஞர்கள், படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களோடு இணைந்து, குறுகிய கால திறன் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. அடுத்தடுத்து பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து, தமிழக இளைஞர்களின் கல்வி, வாழ்க்கை, பொருளாதாரம் உயர ஒரு ஏணியாக திராவிட மாடல் அரசு திகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது மிகையல்ல.