Saturday, June 14, 2025
Home செய்திகள்Banner News 2024ம் ஆண்டில்(01.01.2024 முதல் 31.12.2024 வரை) தமிழில் வெளியிடப்பட்டுள்ள நூல்கள் 33 வகைப்பாடுகளின் கீழ், பரிசுப்போட்டிக்கு வரவேற்பு

2024ம் ஆண்டில்(01.01.2024 முதல் 31.12.2024 வரை) தமிழில் வெளியிடப்பட்டுள்ள நூல்கள் 33 வகைப்பாடுகளின் கீழ், பரிசுப்போட்டிக்கு வரவேற்பு

by Suresh

சென்னை: 2024ம் ஆண்டில்(01.01.2024 முதல் 31.12.2024 வரை) தமிழில் வெளியிடப்பட்டுள்ள நூல்கள் 33 வகைப்பாடுகளின் கீழ், பரிசுப்போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன. தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் அழகு காப்பாய்! இதுதான் நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாகும்!! என்னும் பாவேந்தரின் கவிதை முழக்கத்தைத் தமிழ்நாடு அரசு தலைமேற்கொண்டு, தமிழுக்கு அழகூட்டும் நன்முயற்சியின் விளைவுதான் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாகச் செயற்படுத்தப்படும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் பெருந்திட்டமாகும்.

அறிவு வளர்ச்சியில் அக்கறை இல்லாச் சமூகம் உயர இயலாது என்பதை உணர்ந்தே தமிழ்ச் சமூகம் காலந்தோறும் செயலாற்றி வருகின்றது. வரலாறு அறியப்படாத காலம்தொட்டே இலக்கிய இலக்கணப் படைப்புக்களைத் தருவதில் தமிழ்வாணர்கள் ஏற்றமுடனே இருந்து வருகின்றனர் என்பது கண்கூடு. அந்நிலை இன்றும் தொடர்வதன் அறிகுறியே, இன்றும் தமிழில் எண்ணற்ற நூல்கள் வெளிவருவதே. காலந்தோறும் இந்நன்னிலை தொடருவதற்கே இப்பெருந்திட்டம் ஆக்கம் பெற்றுள்ளது.

அருவி நீர்த்துளிகளைப் போல ஆர்த்தெழும் நூல்களில், கால நீரோட்டத்தை எதிர்த்துப் பயன் தரத்தக்கனவாக – திட்பமும் நுட்பமும் நிறைந்தனவாக அமைவன சிலவே. அத்தகைய நூல்கள் வெளிவருதலின் இன்றியமையாமையை உணர்ந்து, கதை புனைவோரை – காவியம் படைப்போரை – கட்டுரையாளர்களை – ஆய்வு முனைவோரை ஊக்குவிக்க, அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவினரால்; அரசால் வகுக்கப்பட்ட விதிமுறைகளுக்கேற்ப; வரப்பெறும் நூல்களை ஆய்வு செய்து அறிஞர்களின் மதிப்பீடுகளைப் பெற்று, தமிழுக்குத் தகத்தகாய நூல்களைப் படைத்தளித்த நூலாசிரியர்களுக்கும், அந்நூல்களை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கிப் பெருமை கொள்கின்றது.

அவ்வகையில், 2024 ஆம் ஆண்டில் (01.01.2024 முதல் 31.12.2024 வரை) தமிழில் வெளியிடப்பட்டுள்ள நூல்கள் கீழ்க்குறிப்பிட்டுள்ள 33 வகைப்பாடுகளின் கீழ், பரிசுப்போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன. கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு வகைப்பாட்டிலும் சிறந்த நூலாக ஒரு நூல் தெரிவு செய்யப்பட்டு, நூலாசிரியருக்குப் பரிசுத்தொகையாக ரூ.50,000/- அந்நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்குப் பாராட்டுத்தொகையாக ரூ.25,000/- என ஒரு நூலுக்கு ரூ. 75,000/- வரை பரிசுத்தொகைகள் வழங்கப்பெறும்.

நூல் வகைப்பாடு:
1.மரபுக்கவிதை
2.புதுக்கவிதை
3.புதினம்
4.சிறுகதை
5.நாடகம் (உரைநடை, கவிதை)
6.சிறுவ ர் இலக்கியம்
7.திறனாய்வு
8.மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம்
9.பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள்
10.நுண் கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்)
11.அகராதி, கலைக் களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ்
12.பயண இலக்கியம்
13.வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு
14.நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு
15.கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல்
16.பொறியியல், தொழில் நுட்பவியல்
17.மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல்
18.சட்டவியல், அரசியல்
19.பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல்
20.மருந்தியல், உடலியல், நலவியல்
21.தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்)
22.சமயம், ஆன்மிகம், அளவையியல்
23.கல்வியியல், உளவியல்
24.வேளாண்மையியல், கால்நடையியல்
25.சுற்றுப்புறவியல்
26.கணினியியல்
27.நாட்டுப்புறவியல்
28.வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியம்
29.இதழியல், தகவல் தொடர்பு
30.பிற சிறப்பு வெளியீடுகள்
31.விளையாட்டு
32.மகளிர் இலக்கியம்
33.தமிழர் வாழ்வியல்

பரிசுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நேரிலோ, அஞ்சல் வாயிலாகவோ அல்லது இத்துறையின் வலைதளத்திலோ (www.tamilvalarchithurai.org/siranthanool) இலவசமாகப் பதிவிறக்கம் (Download) செய்து பெற்றுக்கொள்ளலாம். அஞ்சல் வாயிலாகப் பெற 23X10 செ.மீ அளவிலான சுய முகவரியிட்ட உறையில் 10 ரூபாய் அஞ்சல் வில்லை ஒட்டி அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.

போட்டிக்கான விண்ணப்பத்துடன் 5 நூற்படிகளும் போட்டிக் கட்டணம் ரூ.100/- “தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை“ என்ற பெயரில் வங்கிக் கேட்புக் காசோலை (Demand Draft) சேர்த்து அளிக்க வேண்டும்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற கடைசி நாள்: 16.06.2025

அனுப்ப வேண்டிய முகவரி
தமிழ் வளர்ச்சி இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம்,
தமிழ்ச்சாலை, எழும்பூர்,
சென்னை 600 008.
தொலைபேசி எண்கள். 044 – 28190412, 28190413

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi