Thursday, December 7, 2023
Home » நூல்கள் பல தந்தவர்!

நூல்கள் பல தந்தவர்!

by Kalaivani Saravanan

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருச்செந்தூர்க் கடலில் (மற்ற கடல்களைப் போல) அலைகள் கிடையாதே தவிர, திருச்செந்தூர் ஆறுமுகன் ஆலயத்தில், எந்த நேரமும் அடியார்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கும். தேவ குருவான வியாழன்பகவான் தொடங்கி ஜகத்குரு ஆதிசங்கரர், அருணகிரிநாதர் என ஏராளமான உத்தமர்களுக்கு திருச்செந்தூர் முருகப் பெருமான் எல்லையற்ற அருள் மழை பொழிந்து, எண்ணிக்கையில்லாத துதிப் பாடல்களையும் பெற்ற திருத்தலம், திருச்செந்தூர். அப்படிப்பட்ட திருச்செந்தூரில், முருகப் பெருமான் சந்நதியில், கைகளில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு, அதன் பெற்றோர்கள் புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

‘‘அப்பா! முருகா! உனக்குத் தெரியாததா? பல காலம் குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டோம். உன்னை வேண்டினோம். உன் அருளால் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் முருகா! இந்தக் குழந்தை பேசவில்லை. ஊமையாகவே இருக்கிறது. பேசச் செய்யப்பா!‘‘இங்கே உன் ஆலயத்திலேயே 48-நாட்கள் விரதம் இருந்து வழிபாடு செய்வோம் நாங்கள். குறை தீர்த்துவை! இல்லாவிட்டால், நாங்கள் உயிரை விட்டுவிடுவோம்’’ என்று அழுது தொழுதார்கள்.

இவ்வாறு வேண்டிய பெற்றோர்கள், தங்கள் ஐந்து வயது குழந்தையுடன், திருச்செந்தூரிலேயே விரதம் இருந்து வழிபாடு செய்யத் தொடங்கினார்கள். 47-நாட்கள் ஆயின. எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. பெற்றோர்கள் மனம் கலங்கினார்கள்.மறுநாள்… அதிகாலை 4.30 மணியளவில், முருகப் பெருமான், ஆலய அர்ச்சகர் வடிவில் வந்து, தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை, ‘‘குமரகுருபரா!’’ என்று கூறித் தட்டி எழுப்பினார்.

குழந்தை விழித்தெழுந்தது. அதன் நாவில், ‘சரவணபவ’ எனும் ஆறெழுத்து மந்திரத்தை எழுதினார் முருகப் பெருமான். கூடவே, ‘‘நம் வழிபாட்டிற்கு வா!’’ என்று சொல்லி மறைந்தார். உடனே குழந்தை, ‘‘அம்மா! அப்பா!’’ என்று அழைத்து, பெற்றோர்களைத் தட்டியெழுப்பி, நடந்ததையெல்லாம் சொன்னது. பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. குழந்தையோ, கந்தக்கடவுள் தனக்கு அருள் புரிந்ததை எண்ணிக் கந்தக் கடவுளைத் துதித்து, ‘கந்தர் கலிவெண்பா’ எனும் நூலைப் பாடியது.பெற்றோர்கள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு, வேகவேகமாகக் கடலுக்குப் போய் நீராடித் திரும்பினார்கள். குழந்தையுடன் சென்று, ஆறுமுகக் கடவுளைத் துதித்து நன்றி செலுத்தினார்கள்.

ஆறுமுகக்கடவுளே.. ஆறெழுத்து மந்திரத்தை நாவில் எழுதி, ‘குமர குருபரா!’ என அழைத்த அந்த ஐந்து வயதுக் குழந்தையை, அன்று முதல், ‘குமரகுருபர அடிகள்’ என்றே அழைத்தார்கள். (நாம் ‘குமர குருபரர்’ என்றே பார்க்கலாம்) அப்போது குமரகுருபரர், ‘‘முருகா! தகுந்த ஞானகுரு ஒருவரைப் பெற வேண்டும் நான்!’’ என்று வேண்டினார். சரவணபவன் சந்நதியிலிருந்து, ‘‘குமரகுருபரா! பல இடங்களுக்கும் செல்! உன் வாக்கு எவரிடத்தில் தடைபடுகிறதோ, அவரிடத்தில் மெய்யறிவு பெறுவாயாக!’’ என்று அசரீரியாக ஒரு வாக்கு கேட்டது. அனைவருமாகத் தங்கள் இருப்பிடமான கைலாசபுரம் திரும்பினார்கள். சில காலம் ஆனது.

குமரகுபரருக்குத் திருத்தல யாத்திரை செய்ய வேண்டுமென விருப்பம் உண்டானது. பெற்றோர்களிடம் சொன்னார். இறையருள் பெற்ற ஞானக்குழந்தையைப் பிரியமனம் இல்லாவிட்டாலும், பெற்றோர்கள் அனுமதி அளித்தார்கள். குமரகுருபரருக்கு, தம்பி ஒருவர் இருந்தார். அவர் பெயர் குமாரகவி. குமரகுருபரர் திருத்தல யாத்திரைக்குச் சென்றபோது, இந்தத் தம்பியும் கூடச்சென்றார். அவ்வப்போது, குமரகுருபரர் பாடிய பாடல்களை எல்லாம், அருகிலிருந்து எழுதியவர், இந்தத் தம்பிதான்! கைலாசபுரத்தில் இருந்து புறப்பட்டு, திருத்தல யாத்திரையாக வந்து கொண்டிருந்த குமரகுருபரர், மதுரையில் எழுந்தருளியுள்ள அன்னை மீனாட்சியைத் துதித்து, ‘மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’ எனும் நூலைப் பாடியபடியே திருப்பரங்குன்றத்தில் வந்து தங்கினார்.

அப்போது, மதுரையை ஆண்டு கொண்டிருந்த மன்னர் திருமலை நாயக்கர் கனவில், அன்னை மீனாட்சி காட்சி கொடுத்தார். ‘‘மன்னா! முருகன் அருள்பெற்ற குமரகுருபரன் எனும் அன்பன், நம் மீது ஒரு பிள்ளைத்தமிழ் நூல் பாடியிருக்கிறான். அவன் இப்போது, திருப்பரங்குன்றத்தில் வந்து தங்கியிருக்கிறான். நீ உன் பரிவாரங்களோடு சென்று, அவனை அழைத்து வா! அவன் பாடிய பிள்ளைத்தமிழ் நூலை இங்கே, நம் முன்னால் அரங்கேற்றம் செய்!’’ என்று கூறி மறைந்தார் மீனாட்சியன்னை. கனவு கலைந்தது. மன்னர் மறுநாள் பொழுது விடிந்ததும் நீராடி, பரிவாரங்களுடன் திருப்பரங்குன்றம் சென்றார். குமரகுருபரரைத் தரிசித்து வணங்கினார். அன்னை மீனாட்சி வந்து கனவில் சொன்ன தகவல்களைச் சொல்லி, அன்னையின் கட்டளையையும் குமரகுருபரரிடம் தெரிவித்தார் மன்னர்.

சொன்னதோடு மட்டுமல்ல! குமரகுருபரரையும் அவர் எழுதிய ‘மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’ நூலையும், தன் பட்டத்து யானை மீது ஏற்றி, நகர்வலமாக மதுரையை அடைந்தார் மன்னர். மதுரைக்கு வந்ததும் குமரகுருபரர் நேராக ஆலயத்திற்குச் சென்று, சோமசுந்தரப் பெருமாளையும், அன்னை மீனாட்சியையும் தரிசித்தார். அப்போது அன்னை மீனாட்சி, குமரகுருபரருக்கு தம் திருக்கோலத்தைக் காட்டியருளினார்.

அம்பிகையின் முன்னாலேயே அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு ஆனது. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் நூலை, உயர்ந்த ஆசனத்தில் வைத்து, வழிபாடு செய்தார் குமரகுருபரர். அதன்பின் குமரகுருபரரின் தம்பி, பிள்ளைத்தமிழ்ப் பாடல்களைப் படிக்க, குமரகுருபரர் அப்பாடல்களுக்குப் பொருள் கூறத் தொடங்கினார். நாள் தோறும் ஒவ்வொரு பருவமாக, அரங்கேற்றம் நடந்தது. முத்தப் பருவத்தில் உள்ள, ‘காலத்தொடு கற்பனை’ என்ற பாடலைப்பாடி, விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார் குமரகுருபரர்.

அப்போது அன்னை மீனாட்சி, அர்ச்சகர் மகளைப்போல் வடிவம் கொண்டு வந்தார். அந்தப் பாட்டின் பொருளைக் குமரகுருபரர் சொல்லி முடிக்கும் வேளையில், மன்னர் கழுத்தில் இருந்த முத்துமாலையைக் கழற்றிப் பரிசாக, குமரகுருபரர் கழுத்தில் அணிவித்தார் அன்னை மீனாட்சி. அது மட்டுமல்ல! அதன்பின் வருகைப் பருவத்தில் உள்ள ‘தொடுக்கும் கடவுள் பழம்பாடல்’ எனும் பாடலைப்பாடி விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார் குமரகுருபரர்.

அப்போது அர்ச்சகர் மகள் வடிவில் வந்திருந்த அன்னை அங்கயற்கண்ணம்மை, ‘‘இந்தப் பாடலை இன்னும் ஒரு முறைபாடு!’’ என உத்தரவிட்டார். குமரகுருபரர் பாடினார். வருகைப் பருவம் முடிவு வரை அவர் பாடி முடித்த அதே விநாடியில், அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ‘பளிச்’ சென்று அங்கிருந்து மறைந்தார்.

வந்திருந்தது அன்னை மீனாட்சி என்பதை அறிந்து, அனைவரும் அதிசயித்தார்கள். குமரகுருபரருக்கு மெய்சிலிர்த்தது. மன்னர் திருமலை நாயக்கரோ, மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தார். குமரகுருபரரைச் சிம்மாசனத்தில் அமர்த்தி, சிறப்புக்கள் பலவற்றையும் செய்தார். திருமலை நாயக்கரின் விருப்பப்படி, மதுரையிலேயே சில நாட்கள் தங்கியிருந்தார் குமரகுருபரர். அப்போது அவர், “மீனாட்சியம்மை குறம்’’, “இரட்டை மணிமாலை’’, “மதுரைக் கலம்பகம்’’ ஆகிய நூல்களைப் பாடினார்.

ஒருநாள்… நண்பகல் நேரம்! நீண்ட நேரமாகியும் மன்னர் திருமலை நாயக்கர், அன்று உணவு உண்ணவில்லை; அரசாங்கக் காரியங்களில் தீவிரமாகக் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தார். அதைக் கண்ட குமரகுருபரர்,

வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது
– எனும் திருக்குறளைக் கூறினார்.

அதைக் கேட்ட மன்னர், ‘‘சுவாமி! தாங்கள் சொன்னதற்குப் பொருள் என்ன?’’ என்று கேட்டார். குமரகுருபரர் சொன்னார்; ‘‘மன்னா! ஒருவன் கோடிக்கணக்கான பொருளைக் குவித்து வைத்திருந்தாலும், தெய்வத்தால் வகுக்கப்பட்ட, விதிக்கப்பட்ட அளவிற்கு மேல், ஒரு சிறிதளவுகூட அப்பொருளை அனுபவிப்பது கடினம். என்பதே, அக்குறளின் பொருள்’’ எனக்கூறி முடித்தார். அதாவது, திருமலை நாயக்கர் மன்னராக இருந்தாலும், கோடிக்கணக்கான செல்வம் படைத்தவராக இருந்தாலும், அவரால் நேரத்திற்கு உணவு உண்ண முடியவில்லை என்பதை, திருக்குறள் மூலம் சொல்லி உணர வைத்தார்.

பார்த்தார் மன்னர்; ‘‘சுவாமி! திருக்குறளின் அறக்கருத்துக்களை வைத்து, தாங்கள் ஒரு சிறிய அறநூல் செய்ய வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார். மன்னரின் வேண்டுகோளை ஏற்ற குமரகுருபரர், அதன்படியே திருக்குறள் கருத்துக்களை அமைத்து, ‘நீதி நெறி விளக்கம்’ எனும் சிறிய நூலைச் செய்தார். அதன் பொருளையும் மன்னருக்கு விரிவாகச் சொன்னார்.

பிறகு, மதுரையை விட்டுப் புறப்படத் தீர்மானித்த குமரகுருபரர், தன்னுடன் இருந்த தம்பி குமாரகவியை அழைத்து, ‘‘நீ கைலாசபுரம் செல்! பெற்றோர்களின் விருப்பப்படி இல்லறத்தில் இரு!’’ என்றார். மன்னர், குமரகுருபரருக்கு அளித்த பரிசுப் பொருட்கள் எல்லாம், ஒட்டகங்களின் மீது ஏற்றப்பட்டன. அவற்றுடன் புறப்பட்ட குமரகுருபரர், திருச்சியை அடைந்தார். திருச்சி தாயுமான சுவாமி, மட்டுவார் குழலியம்மை, திருவானைக் கோயில் ஜம்புகேஸ்வரர் – அகிலாண்டேஸ்வரி ஆலயங்களில், தரிசனங்களை முடித்துக் கொண்டு திருச்சியில் தங்கி இருந்தார் குமரகுருபரர்.

அப்போது திருவரங்கத்தில் இருந்து வந்த, அட்டப் பிரபந்தம் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என்பவர், குமரகுருபரரைக் கண்டு உரையாடி மகிழ்ந்தார். குமரகுருபரரின் திருத்தல யாத்திரை தொடர்ந்தது.திருச்சியிலிருந்து புறப்பட்ட அவர், பல சிவத்தலங்களையும் தரிசித்தபடி, தருமபுரம் எனும் திருத்தலத்தை அடைந்தார். அங்கே மாசிலாமணி தேசிகர் எனும் குருநாதர், சைவ சித்தாந்த நூல்களிலும் மற்றைய ஞான நூல்களிலும் கரை கண்டு, அனுபவசாலியாகவும் இருந்தார்.

அவரைச்சுற்றி அறிஞர்களும் மாணவர்களும் கூட்டமாக இருந்தார்கள். தேசிகரைப்பார்த்தால், தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியைப் போலிருந்தது. அங்கு போன குமரகுருபரருக்கு, அங்கு இருந்தவர்கள் ஓர் ஆசனம் இட்டு அமரச் செய்தார்கள். மகாஞானியான தேசிகருக்கு முன்னால், தமக்கு இடப்பட்ட ஆசனத்தில் மேலாடையுடன் அமர்ந்தார் குமரகுருபரர். மகான்கள், ஞானிகள், தெய்வ சந்நதிகள் ஆகிய இடங்களில், மேலாடையுடன் இருக்கக் கூடாது. அதை எடுத்து இடுப்பில் கட்டிக் கொள்ள வேண்டும்.

குமரகுருபரரோ, மகாஞானியான தேசிகரின் முன்னால் மேலாடையுடன் அமர்ந்திருந்தார். அவரை வரவேற்று ஆசி கூறிய தேசிகர், சில கேள்விகள் கேட்கத் தொடங்கினார். தேசிகர் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம், தடையில்லாமல் சரளமாகப் பதில் சொல்லி வந்தார் குமரகுருபரர். அதற்கு ஒரு வரம்பு கட்டுவதைப் போல, தேசிகர் பெரிய புராணத்தில் இருந்து ஒரு பாடலைச் சொன்னார்.

ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையேயாகக் குணமொரு மூன்றும்
திருந்து சாத்துவிகமே ஆக
இந்து வாழ் சடையான் ஆடும்
ஆனந்த எல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்
– எனும் இப்பாடலைச் சொல்லி, ‘‘இதன்
அனுபவப் பலன் என்ன?’’ எனக் கேட்டார் தேசிகர்.

தடையில்லாமல் பதில் சொல்லி வந்த குமரகுருபரருக்கு, வாக்கு தடைப்பட்டது. தடைப்பட்ட குமரகுருபரருக்கு, திருச்செந்தூர் சந்நதியில் முருகப் பெருமான் சொன்னது, நினைவிற்கு வந்தது. ‘‘உன் வாக்கு எவரிடத்தில் தடைப்படுகிறதோ, அவரை உன் ஞானகுருவாகக் கொள்!’’ என்று முருகப் பெருமான் அருளியதை, தொடக்கத்தில் பார்த்தோம் அல்லவா? அது நினைவிற்கு வந்ததும், குமரகுருபரர் உடனே, தான் உட்கார்ந்திருந்த ஆசனத்தில் இருந்து எழுந்தார். மேலாடையை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார். அப்படியே தேசிகரின் திருவடிகளில் விழுந்து வணங்கி எழுந்தார். கைகளைத் தலைக்கு மேல் கூப்பி வைத்து, ‘‘குருநாதா! ஆணவத்தால் மறைக்கப்பட்ட அடியேன் அறியாமையைப் பொறுத்து, அடியேனை ஆட்கொண்டருள வேண்டும்!’’ என வேண்டினார் குமரகுருபரர்.

பணிவோடு வேண்டிய குமரகுருபரரைச் சீடராக ஏற்றார் தேசிகர். அதன்பின், குருநாதர் கட்டளைப்படி காசி யாத்திரை சென்ற குமரகுருபரர், அங்கே சிங்கத்தின் மேல் ஏறி, டெல்லி பாதுஷாவின் முன் சென்று நிகழ்த்திய அருளாடல்கள் பல! இவர் எழுதிய நூல்களும் பல. தென்னகத்தில், கைலாசபுரத்தில் அவதரித்த குமரகுருபரர், காசியில் வைகாசி மாத தேய்பிறை, திருதியை மூன்றாவது நாளன்று முக்தியடைந்தார்.

மதுரை மன்னர் திருமலை நாயக்கரின் வேண்டுகோளுக்கு இணங்கி, குமரகுருபரர் எழுதிய அருந்தமிழ் நூலான ‘நீதி நெறி விளக்க’த்தில் இருந்து சில பாடல்கள்! 102 – பாடல்கள் கொண்ட நீதிநெறி விளக்கம், நல்வாழ்விற்குத் தேவையான அனைத்தையும் கூறுகிறது. உதாரணமாகக் கல்வியைப்பற்றி… நிறையப் படிக்க வேண்டும். படித்தவைகளை அனுபவத்தில் கொண்டுவர வேண்டும்; கடைப்பிடிக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு, பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு, இன்னும் சிலவற்றைப் படிக்க முயல்வது; கையில் உள்ள பொருட்களை வீசி எறிந்து விட்டு, அப்படி வீசி எறிந்த இடத்திலேயே அப்பொருட்களைத் தேடிச் சல்லடையால் சலித்து (அரித்து) எடுப்பதைப் போன்றதாகும்.

வருந்தித் தாம் கற்றன ஓம்பாது மற்றும்
பரிந்து சில கற்பான் தொடங்கல் – கருந்தனம்
கைத்தலத்த உய்த்துச் சொரிந்திட் டரிப்பரித்
தாங்கு எய்த்துப் பொருள் செய்திடல்

என்னதான் இனிமையாகப் பேசுபவனாக இருந்தாலும், அடக்கம் உடையவனாக இருந்தாலும், அவன் கையில் பொருள் இல்லாவிட்டால், உலகம் அவனை ஏசுவதற்கு வாயைத் திறக்குமே தவிர, பாராட்ட வாயைத் திறக்காது. பணக்காரன் என்ன சொன்னாலும், உலகம் அவனுக்கு அடங்கி நடக்கும். இதுதான் உலக இயல்பு!

அறியாமை நிறைந்த உலகம் இது!

– எனும் பாடல்;
இன்சொல்லன் தாழ்நடையன் ஆயினு
மொன்றில்லானேல்
வன்சொல்லி னல்லது வாய்திறவா – என்
சொலினும்
கைத்துடையான் காற்கீழ் ஒதுக்குங் கடன்
ஞாலம்
பித்துடைய வல்ல பிற

இப்பாடலில் உலக இயல்பைச் சொல்வதோடு, செல்வத்தின் அருமையையும் சொல்லியிருப்பது, மனதில் பதிய வேண்டும். அருளாளர்களின் அருள் நூல்கள் பரவட்டும்! அல்லல்கள் நீங்கட்டும்!

தொகுப்பு: பி.என்.பரசுராமன்

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?