சென்னை: 2.5 கோடி போலி ஐஆர்சிடிசி ஐடிக்களை முடக்கி ஐஆர்சிடிசி நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ரயில்வேயில் தட்கல் டிக்கெட் என்பது கடைசி நிமிட பயணத் திட்டங்களைக் கொண்ட பயணிகளுக்கு உதவுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், ஏசி மற்றும் ஏசி அல்லாத வகுப்புகளில் உள்ள இருக்கைகள், முன்கூட்டியே புக் செய்யப்படுகின்றன. இந்த திட்டம் அவசர ரயில் முன்பதிவுகளை எளிதாகவும், வெளிப்படையாகவும் செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் ஆன்லைன் முன்பதிவு மூலம் அனைத்து பயணிகளுக்கும் நியாயமான அணுகலை உறுதி செய்வதாகும்.
இருப்பினும், பல பயணிகள் இப்போது ஆன்லைனில் தட்கல் டிக்கெட்டைப் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றே கூறுகின்றனர். சரியான நேரத்தில் உள்நுழைந்து, விரைவாக பணம் செலுத்தினாலும், டிக்கெட்டுகள் பெரும்பாலும் முன்பதிவு செய்யப்படுவதில்லை. அதற்கு பதிலாக, பயணிகள் காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களாகவோ அல்லது டிக்கெட் இல்லாமலோ விடப்படுகின்றனர். 2019 முதல் 2024 வரை, இந்திய ரயில்வே சரக்கு மூலம் ரூ.7.02 லட்சம் கோடியும், பயணிகள் மூலம் ரூ.2.41 லட்சம் கோடியும் சம்பாதித்துள்ளது. இதில் பெரும் பகுதி தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளில் இருந்து வந்தவை.
இந்த டிக்கெட் வகைகள் வழக்கமான கட்டணத்தை விட மூன்று மடங்கு அதிகமாகும். இது ரயில்வேக்கு அதிக வருமானத்தைத் தருகிறது. ஆனால் முன்பதிவு செயல்முறை மிகவும் ஏமாற்றமளிக்கும் போது, இது பயணிகளுக்கு ஒரு சுமையாக உள்ளது. 2015ல், வழக்கமான டிக்கெட் முன்பதிவு பற்றிய ஒத்த குறைகளை தொடர்ந்து, ரயில்வே அமைச்சகம் விசாரணை நடத்தியது. சில முகவர்களும் ரயில்வே ஊழியர்களும் புனையப்பட்ட பெயர்களை பயன்படுத்தி பயணிகளின் இருக்கைகளை திருடியது கண்டறியப்பட்டது. பின்னர் பெயர்கள் மாற்றப்பட்டு, முகவர்கள் டிக்கெட்டுகளை உயர்ந்த விலையில் விற்றனர். அந்த பிரச்னை சரி செய்யப்பட்டது.
ஆனால் இப்போது பயணிகள் மீண்டும் இதே போன்ற ஒரு பிரச்னை நடப்பதாக புலம்பி வருகின்றனர். இருந்தாலும் அவற்றை தொடர்ச்சியாக கண்காணிக்க ரயில்வே அமைச்சகம் தவறிவிட்டது. இந்நிலையில், சமீபத்தில் இதுகுறித்து கோடிக்கணக்கான புகார்கள் வந்த நிலையில், அவற்றிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அதன்படி, ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில வினாடிகளுக்குள் புக்கிங்கை நிறைவு செய்து வந்த 2.5 கோடி போலி பயனர் கணக்குகளை ஐஆர்சிடிசி நிறுவனம் முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, அதன் பின்னர் அதிக விலையில் டிக்கெட்டுகளை மீண்டும் விற்கும் மோசடிகளை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பின் உண்மையிலேயே தேவையான பயணிகளுக்கு டிக்கெட்டுகள் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.