கந்தர்வகோட்டை,ஜூலை26: புத்தக திருவிழாவை பயன்படுத்தி கிராமப்புற மாணவர்கள் புத்தகங்களை வாங்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் ரகமத்துல்லா அறிவுறுத்தினார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தக்கூடிய 6வது புத்தகத் திருவிழாவிற்கான விழிப்புணர்வு பேரணி கந்தர்வகோட்டை காந்தி சிலையில் தொடங்கி பேருந்து நிலையம் முதல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வரை நடைபெற்றது. புத்தகத் திருவிழா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வண்ண வண்ண நிறமாக பலூன்கள் பறக்கவிடப்பட்டது. இந்த பேரணியை தாசில்தார் காமராஜ் தொடங்கி வைத்து, கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் அனைவரும் புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் வெங்கடேஸ்வரி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) பிரகாஷ், கந்தர்வகோட்டை ஒன்றிய துணை தாசில்தார் பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில செயலாளர் அரங்க வீரபாண்டியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரச் செயலாளர் சின்ன ராஜா அனைவரையும் வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் துரையரசன் புத்தக திருவிழாவில் நடந்துள்ள வேலைகள் பற்றி பேசினார்.