சென்னை: கோவை சர்வதேச விமான நிலையத்தின் இ-மெயில் முகவரிக்கு நேற்று காலை 10.30 மணியளவில் ஒரு மெசேஜ் வந்திருந்தது. அதில், ‘‘விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. அனைவரும் ஓடி விடுங்கள்’’ என்று இருந்தது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், விமான நிலையம் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய் உதவியுடன் சல்லடை போட்டு சோதனை நடத்தினர். ஆனால் சந்தேகத்திற்கிடமாக எந்த பொருளும் சிக்கவில்லை.
இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதேபோல், திருச்சி சர்வதேச விமான நிலைய முக்கிய அதிகாரிகளின் இமெயில் ஐடிக்கு நேற்று அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்தது. அந்த இமெயிலில், விமான நிலையம் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 2 மணிநேரம் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.