சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது இதுபோன்ற போலியான வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தாலும், ஒவ்வொரு மிரட்டலையும் சாதாரணமானதாக கருதாமல், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் நேற்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கோயில் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கபாலீஸ்வரர் கோயிலுக்குள் மோப்ப நாயை பயன்படுத்தி கோயில் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அறிந்த பக்தர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இந்த நிலையில் சோதனை முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பதை போலீசார் உறுதி செய்தனர்.