சென்னை: சென்னை போலீஸ் தலைமை அலுவலக இமெயில் முகவரிக்கு நேற்று மாலை சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என ஒரு மிரட்டல் மெயில் வந்தது. உடனே இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபுவிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு நேற்று இரவு 7 மணிக்கு சென்றனர்.
அப்போது வீட்டில் இருந்த எடப்பாடியிடம் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாக தெரிவித்தனர். இதைதொடர்ந்து மோப்ப நாய் ரூபியும் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளியாக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இதனிடையே இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.