சென்னை: சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு நேற்று காலை 10 மணி அளவில், இமெயில் ஒன்று வந்தது. அதில் சென்னை விமான நிலையத்தில், குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த குண்டுகள் வெடித்து சிதறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் வேறு எந்த தகவலும் இல்லாமல், மொட்டையாக இமெயில் வந்திருந்தது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சென்னை விமான நிலைய பாதுகாப்பு ஆலோசனை குழு கூட்டம், விமான நிலைய இயக்குனர் தலைமையில் தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் நடந்தது.
அந்தக் கூட்டத்தில் விமான பாதுகாப்பு துறையான பிசிஏஎஸ் எனப்படும் பீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி, மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், விமான நிறுவனங்களின் அதிகாரிகள், சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள், சென்னை விமான நிலைய போலீஸ் அதிகாரிகள், அதிரடி படையினர் உட்பட பல தரப்பினர் கலந்து கொண்டனர்.
இந்த மிரட்டல் ஈமெயில் குறிப்பாக, எந்த ஒரு விமானத்தையோ, இல்லையேல் விமான நிலையத்தின் குறிப்பிட்ட பகுதியையோ குறிப்பிடாமல், மொட்டையாக மிரட்டல் வந்திருந்ததால், சென்னை விமான நிலைய பகுதி முழுவதும், கூடுதல் கண்காணிப்புகளுடன், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்துவதோடு, விமான பயணிகளுக்கு வழக்கமான சோதனையுடன் கூடுதல் சோதனையும், அதோடு விமானங்களில் ஏற்றப்படும் பார்சல்கள், எரிபொருள் நிரப்பும் இடங்கள், விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் பகுதி ஆகிய இடங்களிலும் தீவிர சோதனைகள் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், விமான நிலைய போலீசார் உட்பட அனைவரும் பகல் 1 மணி வரையில், தீவிரமாக சோதனைகள் நடத்தினர். ஆனால் இது புரளி என்று தெரிய வந்தது. இதை அடுத்து சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த மர்ம இமெயில் மிரட்டல் தகவல், வெளிநாட்டில் இருந்து, போலி ஐடியில் வந்திருப்பது தெரிய வந்தது.