சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் பயணிகள் புறப்பாடு பகுதியில், டி 1 கேட் அருகே நேற்று டிராலி ஒன்றில் கருப்பு கலர் பை ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், டிராலியில் பை நீண்ட நேரமாக கிடப்பதை பார்த்துவிட்டு, அங்கு நின்ற சக பயணிகளிடம் விசாரித்தனர். ஆனால் பை எங்களுடையது இல்லை என்று பயணிகள் கூறிவிட்டனர்.
இதையடுத்து விமான நிலைய அறிவிப்பு ஒலிபெருக்கியில், அந்த பை பற்றிய அறிவிப்பு தெரிவித்து, ஒலிபரப்பு செய்தனர். அப்போதும் பைக்கு உரிமை கொண்டாடி யாரும் வரவில்லை. இதையடுத்து அந்த பையில் வெடிகுண்டு போன்ற அபாயகரமான பொருட்கள் ஏதாவது இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், அந்த பை இருந்த டிராலியை தனிமைப்படுத்தி விட்டு, வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் இளைஞர் ஒருவர், இளம்பெண்ணுடன் அவசரமாக அங்கு ஓடி வந்து, பையை எடுக்க முயன்றார்.
அவர்களை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு அதிகாரிகள், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த பையை டிராலியில் வைத்து விட்டு நீங்கள் எங்கு சென்றீர்கள். இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்று கடுமையாக விசாரித்தனர். அதோடு அவர்களை வைத்து அந்த பையை திறந்து பார்த்து, சோதனை நடத்தினார்கள். ஆனால் பைக்குள் துணிகள் தவிர வேறு எதுவும் இல்லை. பின்னர், அவர்களை விசாரித்த போது, இவர்கள் தூத்துக்குடிக்கு விமானத்தில் செல்வதற்காக வந்திருந்தவர்கள், இந்த பையை டிராலியில் மறதியாக வைத்துவிட்டு, விமான நிலையத்தின் வளாகத்திற்குள் உள்ள உணவு விடுதிக்கு உணவருந்த சென்றது தெரியவந்தது. ஆனாலும் பையை கேட்பாரற்று நீண்ட நேரமாக போட்டு விட்டு சென்று, விமான நிலையத்தில் பெரும் பீதியை ஏற்படுத்தியதால் அபராதம் செலுத்த வேண்டும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் இளம்பெண்ணும் இளைஞரும் தங்களுடைய செய்கைக்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்டனர். அதன்பின்பு பாதுகாப்பு அதிகாரிகள் இருவரையும் கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.