திருவொற்றியூர்: எர்ணாவூரில் வீட்டுக்கு சுற்றுச்சுவர் அமைக்க பள்ளம் தோண்டும்போது முதல் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு சிக்கியது. அவற்றை பத்திரமாக மீட்டு செயலிழக்கவைத்து அழித்தனர். சென்னை எர்ணாவூர், ராமகிருஷ்ண நகர் 5வது தெருவை சேர்ந்தவர் முஸ்தபா (50). இவர் தனது வீட்டுக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக கடந்த 21ம் தேதி தொழிலாளர்கள் பள்ளம் தோண்டினர். அப்போது சுமார் 2 அடி நீளம், 10 அடி அகலம் கொண்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அனைவரும் அங்கிருந்து விலகி சென்றனர்.
இதுபற்றி அறிந்ததும் பொதுமக்கள், வெடிகுண்டை பார்க்க வந்ததால் பரபரப்பு நிலவியது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் எண்ணூர் போலீசார் மற்றும் ஆவடி காவல் ஆணையரக வெடிகுண்டு நிபுணர் பிரிவு உதவி ஆய்வாளர் சண்முகம் தலைமையில் 5 பேர் விரைந்துவந்தனர். அவர்கள் பாதுகாப்பு உடைகள் அணிந்து வெடிகுண்டை மீட்டு ஆய்வுக்கு கொண்டு சென்றனர். இதன்பின்னர் மக்கள் நடமாட்டமில்லாத பகுதியில் வைத்து பாதுகாத்து வந்தனர். ‘’இந்த வெடிகுண்டு முதல் உலகப்போரின்போது 1914 செப்டம்பர் 22ம் தேதி, கேப்டன் வான் முல்லர் தலைமையில் எம்டன் கப்பலில் வந்த ஜெர்மனி வீரர்கள் சென்னையை தகர்க்க பீரங்கி மூலம் வீசப்பட்ட வெடிகுண்டு என்றும் அது வெடிக்காமல் புதைந்து கிடந்துள்ளது’ என்று தெரியவந்துள்ளது.
இதனிடையே நீதிமன்ற அனுமதி பெற்று எண்ணூர் காவல் ஆய்வாளர் சதீஷ் மேற்பார்வையில், வெடிகுண்டு செயலிழக்க செய்யும் பிரத்யேக குழுவினர் நேற்று சடையங்குப்பம் கொசஸ்தலை ஆற்றுப்பகுதியில் அந்த வெடிகுண்டை வெடிக்க செய்து செயழிக்க வைத்து அழித்தனர். இந்த சம்பவத்தால் மக்களிடையே பரபரப்பு நிலவியது.