கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட துறைகள் செயல்பட்டு வருகின்றன. 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அங்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் வந்தது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை சேர்ந்த முத்துக்குமாரசாமி என்பவரது பெயரில் வந்த அந்த கடிதத்தை கலெக்டர் அலுவலக ஊழியர்கள் இன்று பிரித்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.
அதில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைப்பதற்கு சிலர் திட்டமிடுவதாகவும், அவர்கள் குறித்த தகவல் தனக்கு தெரியும் என்றும், தனது உயிருக்கு பாதுகாப்பு அளித்தால் அவர்கள் குறித்த விபரத்தை தெரிவிப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு கலெக்டர் அலுவலக ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பின்னர் கடிதம் எழுதியது யார்? என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி கடிதத்தை கைப்பற்றி செங்கோட்டையை சேர்ந்த முத்துக்குமாரசாமி என்பவர் யார்? என கண்டுபிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் தனது பெயரில் யாரோ ஒருவர் கடிதம் எழுதி இருப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் இதேபோல அனைத்து மாவட்டத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது தெரியவந்தது. இந்த கடிதம் அனுப்பிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடிதம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் இருந்து அனுப்பப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து கடிதத்தை அனுப்பிய நபரை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். இதற்கிடையே வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் கலெக்டர் அலுவலகம் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய் உதவியுடன் சல்லடை போட்டு சோதனை நடத்தினர். ஆனால் சந்தேகத்திற்கு இடமாக எந்த பொருளும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.