மீனம்பாக்கம்: மும்பைக்கு செல்வதற்குப் பதிலாக நேற்றிரவு சென்னைக்கு வந்த சீன சரக்கு விமானத்தில் வெடிகுண்டுகள் கடத்தி வரப்படுவதாக மர்ம இ-மெயில் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தின் கார்கோ பகுதியில் சிஐஎஸ்எப் மற்றும் அதிரடி படையினர் மோப்ப நாய்களின் உதவியுடன் விடிய விடிய சோதனை நடத்தினர். பின்னர், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்தியாவின் மும்பை விமானநிலையத்துக்கு சீனாவில் வரும் சரக்கு விமானம் ஒன்றில் அபாயகர வெடிகுண்டுகள் கடத்தி வரப்படுவதாக நேற்று மாலை மும்பை விமானநிலையத்துக்கு ஒரு மர்ம இ-மெயில் வந்துள்ளது. அந்த இ-மெயில், சீனாவின் ஷங்காய் நகரிலிருந்து அனுப்பப்பட்டு இருப்பதும் விமானநிலைய அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. இதனால் மும்பை விமானநிலையத்தில் பரபரப்பு நிலவியது.
அந்த சீன சரக்கு விமானத்தை முழுமையாக பரிசோதிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. இதற்கிடையே, சீனாவிலிருந்து வந்த சரக்கு விமானம் நேற்றிரவு மும்பைக்கு செல்லாமல் சென்னைக்கு செல்வதாக விமானநிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை மற்றும் டெல்லியில் இருந்து சீன சரக்கு விமானத்தில் வெடிகுண்டுகள் கடத்தி வரப்படும் தகவலைக் கூறி, அதற்கான அவசர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது. இதுகுறித்து சென்னை விமானநிலைய இயக்குநர் தலைமையில் நேற்றிரவு அவசரகால பாதுகாப்பு கமிட்டி கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், சீன நாட்டிலிருந்து வரும் சரக்கு விமானத்தை முழுமையாக பரிசோதிப்பதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்), விமான பாதுகாப்பு துறை, அதிரடிப்படை, வெடிகுண்டு சோதனை நடத்தும் மோப்பநாய் பிரிவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலைய கார்கோ பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. அங்கு கூடுதல் அதிரடி படையினர், மோப்பநாய் வெடிகுண்டு சோதனை பிரிவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சந்தேகிக்கப்படும் சீன சரக்கு விமானம் உள்பட பல்வேறு கார்கோ விமானங்களை தனியே நிறுத்தி, வெடிகுண்டுகள் இருக்கிறதா என மோப்பநாய்களின் உதவியுடன் நிபுணர்கள் மற்றும் அதிரடி படை, விமான பாதுகாப்பு படை, மத்திய உளவு பிரிவினர், கியூ பிரிவு போலீசார் என பல்வேறு தரப்பினரும் முழுமையாக பரிசோதித்தனர். இச்சோதனை நேற்றிரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய நடைபபெற்றது. எனினும், சீன சரக்கு விமானத்தில் சந்தேகிக்கும் நிலையில் எந்த வெடிகுண்டுகளும் இல்லை எனத் தெரியவந்தது.
இதனால் இந்த மர்ம இ-மெயில் தகவல், வழக்கம் போல் வரும் வெடிகுண்டு மிரட்டல் புரளிதான் என்பது விமானநிலைய மற்றும் கார்கோ பிரிவு அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. பொதுவாக, சென்னை விமான நிலையத்தில் பயணிகள் விமானங்களுக்கு மட்டும் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது வழக்கம். தற்போது முதன்முறையாக சென்னைக்கு வந்த சீன சரக்கு விமானத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக மிரட்டல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சென்னை விமானநிலையத்தில் பயணிகள் விமான சேவையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அவை வழக்கம் போல் இயக்கப்பட்டு வந்தன. எனினும், பயணிகளிடையே மட்டும் பரபரப்பு நிலவியது.