திருவனந்தபுரம்: மும்பையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு நேற்று அதிகாலை 5.45 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 135 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் காலை 8.10 மணிக்கு திருவனந்தபுரத்தில் தரையிறங்க வேண்டும். இந்நிலையில் சுமார் 7.30 மணியளவில் திருவனந்தபுரம் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்ட விமானத்தின் பைலட், விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக எழுதப்பட்ட ஒரு துண்டு பேப்பர் கழிப்பறையில் கிடப்பதாக கூறியுள்ளார்.
உடனடியாக விமானத்தை தரையிறக்குமாறு கட்டுப்பாட்டு அதிகாரிகள் பைலட்டிடம் கூறினர். தொடர்ந்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் தயாராக நிறுத்தப்பட்டனர். அந்த விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டு, பின்னர் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டனர். தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தில் ஏறி வெடிகுண்டு ஏதும் இருக்கிறதா என சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து அனைத்து பயணிகளிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் பயணிகள் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.