கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட குண்டு வெடித்ததில் இரண்டு பேர் பலியானார்கள். மேலும் 4 பேர் காயமடைந்தனர். சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் ராணுவ முகாம் ஒன்று அடித்து செல்லப்பட்டது. முகாமில் இருந்த 20க்கும் மேற்பட்ட வீரர்கள், ராணுவ வாகனங்கள், அங்கு வைக்கப்பட்டு இருந்த துப்பாக்கிகள், ஆயுதங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இந்நிலையில் ஆற்று நீரில் அடித்து வரப்பட்ட வெடிகுண்டு ஒன்று மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் சபடங்கா கிராமத்தில் கரை ஒதுங்கியதாக தெரிகிறது. இதனை உலோக பொருளாக கருதி எடுத்து சென்ற கிராமத்து நபர் அதனை உடைக்க முயற்சித்துள்ளார். இதில் குண்டு வெடித்து இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். இது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஆற்றில் துப்பாக்கிகள், வெடிப்பொருட்கள் அடித்து வரப்பட்டால் பொதுமக்கள் யாரும் அதனை எடுக்க வேண்டாம் என்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.