திருமலை: தமிழ்நாட்டில் பல்வேறு குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய மன்சூர், அபுபக்கர் சித்திக் ஆகியோரின் மனைவிகளை போலீசார் நேற்று கைது செய்தனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் கடந்த 1995ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு, அதே ஆண்டு நாகூர் பார்சல் குண்டு வெடிப்பில் தங்கம் என்பவர் இறந்தது, 1999ம் ஆண்டு சென்னை, திருச்சி, கோவை மற்றும் கேரளா என 7 இடங்களில் குண்டுகள் வைத்த வழக்கு, சென்னையில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தை குறிவைத்து குண்டுகள் வைக்கப்பட்டது, கடந்த 2011ம் ஆண்டு மதுரையில் எல்.கே.அத்வானியின் ரத யாத்திரையின் போது நடந்த பைப் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளான மன்சூர், அபுபக்கர் சித்திக் ஆகிய இருவரும் 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தனர்.
இந்நிலையில் இருவரும் ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், ராயச்சோட்டியில் உள்ள கோத்தப்பள்ளிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்று புடவை வியாபாரம் செய்வது போல் நடித்து வந்தனர். இதற்கிடையில் இருவருக்கும் திருமணமும் நடந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அவர்களின் நடமாட்டத்தை அடையாளம் கண்ட தமிழக போலீசார் இருவரையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்து அவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக பயங்கரவாதி மன்சூர் மனைவி ஷமிம், அபுபக்கர் சித்திக்கின் மனைவி சாய்ரா பானு ஆகியோரை நேற்று ஆந்திரா போலீசார் கைது செய்து ராயச்சோட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இருவரது வீட்டில் இருந்தும் சக்தி வாய்ந்த 2 சூட்கேஸ் வெடிகுண்டு, 2 பக்கெட் வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் நேற்று மாலை பறிமுதல் செய்யப்பட்ட 4 வெடிகுண்டுகளையும் போலீசார் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வெடிக்கச் செய்தனர்.