Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

வெடிகுண்டு வைக்க திட்டமிட்டிருப்பதாக கூறி அதிமுக மாஜி அமைச்சரிடம் ரூ.1 கோடி கேட்டு கொலை மிரட்டல்: கடிதத்தை கைப்பற்றி போலீஸ் விசாரணை

கோவை: வெடிகுண்டு வைக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறி ரூ.1 கோடி கேட்டு அதிமுக மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் வந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி வேலுமணி எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் வந்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ஜூலை 30ம் தேதிக்குள் கோவையில் வெடிகுண்டு வெடிக்க உள்ளது. நாங்கள் உங்களை கொல்ல திட்டமிட்டுள்ளோம். எங்களுடைய நபர்கள் உங்கள் அருகில் இருக்கிறார்கள். எங்கள் அமைப்புக்கு பணம் வேண்டும். போலீஸ் டிபார்ட்மென்ட்ல கூட நம்ம ஆளுங்க இருக்கிறார்கள். உங்கிட்ட நிறைய கருப்பு பணம் இருக்கு.

அதுக்கு எங்களிடம் ஆதாரம் இருக்கு. ரூ.1 கோடியை பையில வச்சு, நா சொல்ற இடத்துக்கு வந்து வச்சுடு. நீ வரலாம் இல்லனா உன்னோட டிரைவர் வரலாம். பண பையை 25ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 2.30 மணிக்குள் வைக்கவும். நேரத்தை தவற விடாதீர்கள். சரியா காளப்பட்டி - வெள்ளானைப்பட்டி ரோட்டில் கலிய பெருமாள் குட்டை கிட்ட குப்பை மேட்டுல பையை வச்சுட்டு நீ போயிடலாம். என்னோட ஆளுங்க அந்த பையை எடுத்துபாங்க. உங்க பையில் எந்த ஜிபிஎஸ் டிராக்கிங் டிவைஸையும் வச்சுக்காதீங்க. 3 நாட்களுக்கு பிறகு, அதே பையில அதே இடத்துல உங்க இ-மெயில் ஐடியுடன் ஒரு ரகசிய குறியீட்டை பெறுவீர்கள். இப்படி செய்தால் எங்க பக்கத்துல இருந்து எந்த பிரச்னையும் வராது. நீங்க போலீசுக்கு போனாலோ, எங்களை பிடிக்க முயற்சித்தாலோ உங்க குடும்பத்தில் 3 பேரை 3 மாதங்களுக்குள் கொல்வோம்.

இது வெறும் மெசேஜ் இல்ல, இது எச்சரிக்கை. இவ்வாறு அதில் எழுதப்பட்டு இருந்தது. மேலும், அந்த கடிதத்தின் பின் பக்கத்தில் கூகுள் மேப் வரைபடம் ஒன்றும், அதில் “டிராப் தி பேக்” என்றும் எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து கோவை புறநகர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளரும், அதிமுக மாநில துணைச்செயலாளருமான தாமோதரன் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்படி குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிந்து அந்த கடிதம் எங்கிருந்து வந்தது. யார் அனுப்பினார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.