புதுடெல்லி: டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு மாநில அரசுக்கும் அரசு இல்லம் இருக்கிறது. இதில் தமிழ்நாட்டிற்கு என்று வைகை, பொதிகை என இரண்டு அரசு இல்லங்கள் சாணக்கியாபுரி பகுதியில் வெவ்வேறு இடங்களில் உள்ளது. இதில் வைகை இல்லத்தில் தற்போது புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அது பயன்பாட்டில் இல்லை என்பதால், பொதிகை இல்லம் மட்டும் தான் செயல்பட்டு வருகிறது.
இதுபோன்ற சூழலில் பொதிகை இல்லத்திற்கு நேற்று காலை மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தனர். இதையடுத்து சம்பவம் குறித்து சாணக்கியாபுரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் இல்லம் முழுவதையும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர். ஆனால் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டது போன்று எந்த ஒரு தடயமும் இல்லை என்பது உறுதியானது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் செய்தியும் புரளி என்று தெரியவந்தது.
இதில் பொதிகை இல்லத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் விருந்தினர்கள் என பலரும் தங்கியிருந்த நிலையில் அனைவரையும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அதேப்போன்று தரைதளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டன. சுமார் 3மணி நேரமாக தமிழ்நாடு இல்லம் பரபரப்பாக காணப்பட்டது.