ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் சங்கர்ரெட்டி மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழந்தனர். தெலுங்கானா மாநிலம் சங்கர்ரெட்டி மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் காலை வேளைக்கு வந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். தொழிற்சாலையில் ஊழியர்கள் பணியில் இருந்தபோது திடீரென்று பாய்லர் வெடித்தது. இதனால் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் 100 மீட்டருக்கு மேல் தூக்கி வீசப்பட்டனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
8 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்த நிலையில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து காயமடைந்தவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீக்காயமடைந்த பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.