பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில், மகளிர் மல்யுத்தம் 50 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் நேற்று களமிறங்கிய இந்திய நட்சத்திரம் வினேஷ் போகத் (29 வயது), பைனலுக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்து இருந்தார். ஆனால் அவருக்கு இன்று உடல் எடை தகுதி சோதனை செய்தபோது 50 கிலோ மற்றும் 100 கிராம் எடை இருந்தது. நிர்ணயித்த 50 கிலோவைவிட 50 கிராம் எடை அதிகம் இருந்ததால், வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
முன்னதாக நேற்று அரையிறுதிப் போட்டி முடிவடைந்த பின்னர் வினேஷ் போகத் உடல் எடை சோதனை செய்துள்ளார். அப்போது அவரது எடை 52 கிலோவாக இருந்துள்ளது. இதையடுத்து இரவு முழுவதும் தூங்காமல் ஸ்கிப்பிங், சைக்கிளிங் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். தொடர் பயிற்சியால் ஒரே இரவில் 1.85 கிலோ உடல் எடையை வினேஷ் குறைத்துள்ளார். ஆனாலும் எஞ்சிய 150 கிராம் எடையை குறைக்க முடியவில்லை என்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இரவு முழுவதும் தூங்காமல் பயிற்சி மேற்கொண்டதால் வினேஷ் போகத்துக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு, பாரிஸில் ஒரு பாலி கிளினிக்கில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய முக்கிய உறுப்புகள் எல்லாம் சீராக இயங்குகின்றன என்றும் நீர்ச்சத்து குறைபாட்டுக்காக மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.