டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே எந்தவித நிபந்தனையுமின்றி நிரந்தர போர் நிறுத்தத்தை உடனே கொண்டு வர வேண்டும் என நேற்று முன்தினம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வரைவு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட 14 நாடுகள் ஆதரவாக வாக்களித்த நிலையில், எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா தன் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது. இந்நிலையில் ஹமாஸ் படையினர் பிடித்து சென்ற இஸ்ரேல் பணய கைதிகளின் உடல்களை இஸ்ரேல் ராணுவம் மீட்டுள்ளது.
காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இருந்து காடி ஹகாய்(72) மற்றும் அவரது மனைவி ஜூடி வெயின்ஸ்டீன் ஹகாய்(70) ஆகியோரின் உடல்களை மீட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அவர்களின் மரணங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் பிடியிலுள்ள பணய கைதிகள் மீட்கப்படும் வரை போர் தொடரும் என தெரிவித்துள்ளார்.