பந்தலூர் : நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் வைத்திரி தாலுகா மேப்பாடி முண்டகரை, சூரல்மலை பகுதியில் கடந்த 30ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டு 400க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்ப்பட்ட சம்பவம் நாடு முழுதும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, இந்திய ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்கள் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் சாளியாற்றில் மிதந்து வருகிறது. அவ்வாறு மிதக்கும் உடல்களை மீட்பு பணியில் உள்ளவர்கள் மீட்டு தமிழக எலைப்பகுதியான நாடுகாணி, தேவாலா, பந்தலூர், சேரம்பாடி வழியாக மேப்பாடி பகுதிக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், நேற்று பந்தலூர் பஜார் பகுதியில் ஆம்புலன்சில் கொண்டு செல்லும் உடல்களுக்கு பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் வரிசையாக நின்று மலர் தூவி மரியாதை செலுத்தி வழியனுப்பி வைத்தனர்.