செங்கல்பட்டு: செங்கல்பட்டில் ரூ.65 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்ட படகு குழாம் கட்டுமான பணியை மீண்டும் தொடங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டில் சுமார் 430 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவு கொண்ட மிகப்பெரிய ஏரியான கொளவாய் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் ஒரு கரை பகுதியில் பல்லவர் காலத்தில் மகாராணிகள் மற்றும் ராஜாக்கள் குளிக்க பயன்படுத்திய அகழிகள் பாதுகாப்பு அரண்கள் அமைந்துள்ளது.
இந்த ஏரியில் ஏற்கனவே தாலுகா காவல் நிலையம் பின்புறம் மற்றும் புலிப்பாக்கம் பகுதியில் படகு குழாம் செயல்பட்டு வந்தது. அங்கு வாகனங்கள் நிறுத்துவதற்கானபோதுமான இடவசதி இல்லை. அதனால், 2 இடங்களிலும் செயல்பட்டு வந்த படகு குழுாம் செயல்படுத்த முடியவில்லை. இந்நிலையில், பொதுப்பணித்துறையின் மூலம் கொளவாய் ஏரியை தூர்வாரி சுத்தம் செய்து ரூ.65 கோடி மதிப்பீட்டில் அதிநவீன முறையில் படகு குழாம் அமைத்து முட்டுக்காடு, பாண்டிச்சேரியை விட மிக சிறப்பான சுற்றுலா தலம் அமைக்க திட்டமிட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் தலைமையில் பூமிபூஜை போடப்பட்டது.
அதற்கான பணியும் துவங்கப்பட்டது. அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பணி நிறுத்தப்பட்டது. மீண்டும் அப்பணி 2021ம் ஆண்டு இறுதியில் துவங்கப்பட்டது. தரைத்தளத்துடன் கூடிய மூன்றடுக்கு கட்டிடம் மிக வேகமாக நடைபெற்றது. இதற்காக வடமாநில கட்டிட பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் அங்கேயே தங்கி பணியாற்றி வந்தனர். படுவேகமாக நடைபெற்று வந்த இந்ந படகு குழாம் பணி திடீரென கடந்த ஆறுமாதமாக கிடப்பில் போடப்பட்டது. அன்று முதல் இன்று வரை எந்த ஒரு அதிகாரியும் அந்த பணி குறித்தோ அந்த இடத்திற்கு நேரில் சென்றோ பார்வையிடவில்லை.
கோடிக்கணக்கான ரூபாயை செலவழித்து கட்டப்பட்ட அந்த படகு குழாம் கட்டிடப்பணி மூன்றடுக்கு வரை கட்டப்பட்டு அந்த கட்டிடத்தை சுற்றி முள்புதர்கள் மரங்கள் சூழ்ந்து அந்த இடத்திற்கு செல்ல வேண்டிய பாதையையே செடிகள் மண்டி மறைக்கப்பட்டு கேட்பாரற்று கிடக்கிறது. இந்த கட்டிடத்தை மாவட்ட நிர்வாகம் துறை சார்ந்த அமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு கிடப்பில் போடப்பட்ட இந்த பணியை துவங்கி செங்கல்பட்டு மக்களின் நீண்ட நாள் கனவான இந்த படகு குழாம் திட்டத்தை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கின்றனர்.
* சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கொளவாய் ஏரியில் வருடம் முழுவதும் தண்ணீர் உள்ளதால் படகு குழாம் அமைத்தால், பொதுமக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு இடமாக இந்த இடம் விளங்கும். இங்கு, ரயில் வசதியும், பேருந்து வசதியும் உள்ளதால் பொதுமக்கள் அதிகம் பேர் வருவார்கள். மேலும், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால் தென் மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு பொழுது போக்கு மையமாக விளங்கும். ஏன்னென்றார்ல,இந்த சுற்று வட்டார பகுதியில் படகு குழாம் வசதி இல்லை. எனவே, கடந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட படகு குழாம் பணியினை விரைந்து தொடங்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றானர்.