மதுரை: உண்டு உறைவிட படிப்பிற்கான நுழைவுத்தேர்வு குறித்து நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடக் கோரிய வழக்கில், ஒன்றிய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை, கே.கே.நகரை சேர்ந்த செல்வகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பட்டியலின மாணவ, மாணவர்கள் 9 முதல் 12ம் வகுப்பு வரை உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி பயில ஒன்றிய அரசு தேர்வு நடத்தி தேர்வு செய்து இலவச கல்வியளிக்கிறது. இதற்கான நுழைவுத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்த நுழைவுத் தேர்வு குறித்து தேசிய தேர்வு முகமை முறையான அறிவிப்போ, விளம்பரமோ செய்வதில்லை.
குறிப்பாக, அந்தந்த மாநில மொழிகளில் விளம்பரம் செய்வதில்லை. இதனால் கிராமப்புறத்தில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு போய் சேர்வதில்லை. குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டியலின மாணவ, மாணவியர் கலந்து கொள்ளமுடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த நுழைவுத்தேர்வு குறித்து ஒன்றிய அரசின் தேசிய தேர்ச்சி முகமை தரப்பில் நாளிதழ்களில் முறையாக விளம்பரம் வெளியிடுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியாகவுரி ஆகியோர், மனுவிற்கு ஒன்றிய உயர்கல்வித்துறை செயலர், தேசிய தேர்வு முகமை இயக்குநர் ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப். 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.