திருப்பூர் : திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தி இருந்த 3 சக்கர வாகனத்தில் இருந்து ரத்தம் வடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று சக்கர வாகனத்தில் இருந்து ரத்தம் வடிந்தபடி இருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து, அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் மீன் இறைச்சி இருந்ததையும், அதில் இருந்து ரத்தம் கீழே வடிந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதன் பின்னரே அங்கு நிலவிய பரபரப்பு அடங்கியது.