சென்னை: நெருக்கடி நிலையை அமல்படுத்தி தினமும் பொய்யை சொன்ன காங்கிரசார், பாஜவை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை என்று எச்.ராஜா கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்த தினத்தை முன்னிட்டு பாஜ சார்பில் திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் ‘மோடி நாட்டுக்கு பாதுகாப்பு; தலைக்கவசம் உயிருக்கு பாதுகாப்பு’ என்ற வாசகத்துடன் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
விழாவிற்கு பாஜ மாநில செயலாளர் எஸ்.சதீஷ்குமார் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக பாஜ ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா பங்கேற்று 574 வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்டுகளை வழங்கினார். தொடர்ந்து எச்.ராஜா அளித்த பேட்டி: திருப்பதி லட்டு பிரசாதத்தில் பன்றிக் கொழுப்பும், மாட்டுக் கொழுப்பும் கலக்கப்பட்டதுதான் தற்போதைய அதிர்ச்சித் தகவலாக உள்ளது. ராகுல்காந்தியை நான் தேசவிரோதி என்று விமர்சித்ததாக கூறுகிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த நாடு முழுவதும் அவரது இந்திய விரோத நடவடிக்கை விவாதப் பொருளாகி இருக்கிறது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய்யான தகவல்களை வெளியிட்டதாக கூறும் காங்கிரசார், நெருக்கடி நிலையை அமல்படுத்தி தினமும் பொய்யைச் சொன்னவர்கள், பொய்யாகவே பிறந்தவர்கள், நிர்மலா சீதாராமன் மீது குற்றச்சாட்டு சொல்வதற்கு எந்த அருகதையும் இல்லாதவர்கள். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த், மீனவர் அணி செயலாளர்கள் சவுந்தர், பிரேம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.