நூவ்: நூவ் பகுதியில் தடையை மீறி யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அரியானாவின் நூவில் கடந்த சில வாரங்களுக்கு முன் இரு சமூகங்களுக்கு இடையே நடந்த வன்முறை சம்பவத்தால் 2 ஊர்காவல் படையினர் உட்பட 6 பேர் பலியாகினர். தொடர்ந்து நூவில் பதற்றம் நிலவி வரும் நிலையில், நாளை வரை அங்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நூவ் நகரில் பிரஜ் மண்டல் யாத்திரை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த யாத்திரைக்கு மாநில அரசு அனுமதிக்கவில்லை.
கோயிலில் ஜலாபிஷேகம் செய்யலாம், வழிபாடு செய்யலாம், ஆனால் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படாது என்று மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்திருந்தார். இருந்தும் முதல்வரின் அறிவிப்பை ஏற்காத விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், குறிப்பிட்ட பகுதியில் யாத்திரை செல்ல உள்ளதாக அறிவித்துள்ளனர். அதனால் நேற்றிரவு முதல் நூவ் பகுதியில் பாதுகாப்புப் படையினர், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தடுப்பதற்காக நூவ் பகுதியில் கடுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ட்ரோன்கள் மூலம் கண்ணிக்கப்படுவதாகவும், நாளை இணைய சேவை முடக்கப்படும் என்றும், சில பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாகவும் ேபாலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.