காங்போக்பி: மில் குப்பை எரித்த போது நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி மாஜி எம்எல்ஏவின் மனைவி பலியானார். மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டம் சைகுல் தொகுதி முன்னாள் எம்எல்ஏ யம்தோங் ஹாக்கிப்பின் இரண்டாவது மனைவி சபம் சாருபாலா, அவரது வீட்டில் இருந்தார். மெய்தீஸ் சமூகத்தை சேர்ந்த இவர், குகி சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்த குப்பைகளை எரிக்கும் போது திடீரென குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் சாருபாலா பலத்த காயமடைந்தார். சைகுலில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது முன்னாள் எம்எல்ஏ ஹாக்கிப்பும் வீட்டில் இருந்துள்ளார். ஆனால் அவருக்கு காயம் ஏற்படவில்லை. முதற்கட்ட விசாரணையில், ஹாக்கிப்பின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருந்ததாகவும், சாருபாலா குப்பைகளை எரிக்கும் போது விபத்து நடந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. குடும்பத் தகராறே இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணம் என்றும் கூறுகின்றனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யம்தோங் ஹாக்கிப், கடந்த 2022ல் பாஜகவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.