பெரம்பூர்: சென்னை ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்கப்படுவதாக ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ரமேஷுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் ஓட்டேரி டோபிகானா குடிசை மாற்று வாரிய பகுதியில் 2 பேரை பிடித்து விசாரணை செய்தபோது, இவர்கள் கள்ளச்சந்தையில் மது பாட்டில்களை விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, பிடிபட்ட 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில், ஓட்டேரி டோபிகானா குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த காட்டு ரோஜா (65), அதே பகுதியை சேர்ந்த வினோத் (27) என்பது தெரியவந்தது.
இவர்களின் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும், மேலும் இவர்களிடமிருந்து 20 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோன்று, புளியந்தோப்பு காவல் நிலையத்துக்கு உட்பட்ட ராமசாமி தெருவில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட வியாசர்பாடி பள்ளத்தெரு பகுதியை சேர்ந்த சாம்ராஜ் (28) என்ற நபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து மாவா மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், இவரிடமிருந்து ரூ.30 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சாம்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்த புளியந்தோப்பு போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செம்பியம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெரம்பூர் பாக்சன் தெரு பகுதியில் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்கப்படுவதாக செம்பியம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், அதனை பதுக்கி விற்பனை செய்த பெரம்பூர் பாக்சன் தெருவை சேர்ந்த வேளாங்கண்ணி (38) என்ற பெண்ணை கைது செய்தனர். பிறகு அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.