Thursday, April 18, 2024
Home » தரமான மகசூல் தரும் கருப்பு தாய்லாந்து மரவள்ளி!

தரமான மகசூல் தரும் கருப்பு தாய்லாந்து மரவள்ளி!

by Porselvi

சேலம் மாவட்டம் சங்ககிரிக்கு அருகே இருக்கிறது தேவூர் என்கிற கிராமம். இந்த அழகிய கிராமத்தில் எங்கு பார்த்தாலும் நெல் வயல்கள்தான் பசுமைகட்டி நிற்கின்றன. இதற்கிடையில் யுவராஜா என்ற விவசாயி மட்டும் தனித்துவமாக கருப்பு தாய்லாந்து ரக மரவள்ளியைப் பயிரிட்டு வருகிறார். பள்ளி ஆசிரியராக பணியாற்றும் யுவராஜா, தனது வேலை நேரம் போக மீதமிருக்கும் நேரத்தில் விவசாயம் பார்க்கிறார். விவசாயத்தை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்லும் பலருக்கு மத்தியில் ஆசிரியர் பணியை செய்துகொண்டே கிடைத்த நேரத்தில் விவசாயத்திலும் சாதித்துவரும் யுவராஜாவை அவரது மரவள்ளி வயலில் சந்தித்தோம்.‘‘அரசுப் பள்ளியில் கணினி ஆசிரியராக இருந்தபோதிலும் விவசாயம் செய்துதான் முழுமையான மகிழ்ச்சியைத் தருகிறது. பள்ளி வேலை முடிந்தவுடன் நேராக விவசாய நிலம் நோக்கித்தான் தினமும் வருகிறேன்’’ என விவசாயத்தின் மீது தனக்கிருக்கும் அக்கறையுடன் பேச ஆரம்பித்தார் யுவராஜா.

“பிறந்தது வளர்ந்தது எல்லாம் இதே ஊர்தான். கல்லூரிப் படிப்பு முடித்த பிறகு ஆசிரியர் பணி கிடைத்தது. ஆசிரியர் பணி செய்து வந்தாலும் எனக்கு விவசாயத்தின் மீதிருந்த ஆர்வம் குறையவே இல்லை. அப்பாவுக்கு விவசாயம் தொழில் கிடையாது. விவசாயம் சார்ந்த எந்த விசயமும் எனக்கு தெரியாது. ஆனாலும் விவசாயத்தின் மீது எனக்கு ஆர்வம் இருந்துகொண்டே இருந்தது. இதனால் விவசாயம் சார்ந்த ஒவ்வொரு விசயத்தையும் தெரிந்துகொள்ள விரும்பினேன். பல முன்னோடி விவசாயிகளிடம் நேரடியாக சென்று சந்தேகங்கள் கேட்பேன். அதைத் தொடர்ந்து வேளாண் துறை அதிகாரி களிடமும் பல விசயங்கள் குறித்து கேட்டுத் தெரிந்துகொள்வேன். விதைகளைத் தேர்ந்தெடுப்பது முதல் விளைச்சலை சந்தைப்படுத்துவது வரை அனைத்தையும் கேட்டுத் தெரிந்து கொள்வேன். அதுபோக, விவசாயம் குறித்த சந்தேகங்கள் மற்றும் பிற மாநில பாரம்பரிய விதைகள் பற்றி இணையத்தில் தேடிப் படித்து அந்த விவசாய முறைகளையும் தெரிந்து கொண்டேன். இப்படித்தான் எனக்கு விவசாயம் அறிமுகமானது. விவசாயத்திற்கென்று நிலம் இல்லை என்பதால், ஒரு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறேன்.

6 வருடங்களுக்கு முன்பு நான் விவசாயத்தில் இறங்கியபோது நெல் சாகுபடியைத்தான் முதலில் செய்தேன். இப்போது மரவள்ளி சாகுபடி செய்கிறேன். முதலில் எனது நிலத்தில் கர்நாடக ரக நெல்லை சாகுபடி செய்தேன். முதல் வருடமே நல்ல விளைச்சல் கிடைத்தது. எனது வயலில் வந்த விளைச்சலைப் பார்த்து எங்கள் ஊரில் இருக்கிற மற்ற விவசாயிகள் ஆச்சர்யம் அடைந்தார்கள். விவசாயத்தைப் பொருத்தவரை ஒவ்வொரு அடியும் முக்கியமானது. மருந்து தெளிப்பதில் இருந்து நீர்ப் பாய்ச்சுவது வரை ஒவ்வொரு விசயத்திலும் மிகவும் கவனமாக செயல்படுவேன். வயலில் சிறியதாக ஏதாவது நோய் தாக்குதல் இருப்பது தெரியவந்தால் உடனே வேளாண் துறை அதிகாரிகளை அழைத்து அதற்கு தகுந்த மருந்துகளைக் கொடுத்து விடுவேன். பயிரிடுவதற்கு முன்பாக உழவு ஓட்டும்போது மண்ணிற்கு உயிர் உரம் கொடுக்கத் தவறியதில்லை. இதனால், எந்தப் பயிர் விதைத்திருந்தாலும் அந்தப் பயிரின் வேர் நன்றாக வளர்ச்சி பெற்று சரியான முறையில் நோய்த் தாக்குதல் இன்றி செழித்து வளர்கிறது.

முதலாம் ஆண்டில் நெல், அதற்கு அடுத்த ஆண்டில் மக்காச்சோளம், அதற்கும் அடுத்த ஆண்டு உளுந்து என வரிசையாக ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பயிர்களை பயிரிட்டு வந்தேன். உளுந்து பயிரிடத் தேவையான விதைகளை வேளாண் துறை அலுவலகத்தில் இருந்து வாங்கினேன். விதை தரும்போது, ஏக்கருக்கு 350 கிலோ வரை மகசூல் தரும் எனக் கூறினார்கள். ஆனால் அந்த விதையில் இருந்து ஏக்கருக்கு 500 கிலோவுக்கு மேல் மகசூல் கிடைத்தது. ஒவ்வொரு விசயங்களையும் கவனமாக செய்ததால்தான் இவ்வாறு கூடுதல் விளைச்சல் பெற முடிந்தது. இந்த வருடம் என்ன பயிர் செய்யலாம் என யோசித்தபோது 2 விசயங்கள் தோன்றியது. ஒன்று நெல் பயிரிடுவது அல்லது மரவள்ளி பயிரிடுவது. அதிலும் கருப்பு தாய்லாந்து ரக மரவள்ளி பயிரிட வேண்டும். அப்படி இல்லையென்றால் நெல் விவசாயமே செய்யலாம் என நினைத்து வைத்திருந்தேன். அப்போதுதான் ஈரோடு அந்தியூரில் ஒரு விவசாயியிடம் இந்தக் கருப்பு தாய்லாந்து ரக மரவள்ளி இருப்பது தெரிய வந்தது. உடனே அவரைத் தொடர்பு கொண்டு இந்த ரகக் கம்புகளை வரவைத்து பயிரிட்டேன்.

மரவள்ளி நடுவதற்கென்றே எங்கள் ஊரில் தனியாக ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களைத் தொடர்பு கொண்டால், அவர்களே ஈரோட்டில் இருந்து விதைக்குச்சிகளை வரவைத்து மரவள்ளியை நட்டு உயிர்த்தண்ணீர் பாய்ச்சிவிட்டு சென்று விடுவார்கள். அவர்களின் மூலம்தான் இந்தக் குச்சிக்கிழங்கை நட்டேன். கிழங்கைப் பொருத்தவரை அதன் வேர் தான் நமக்கு கிழங்கு. வேர் நன்றாக வளர வேண்டுமென்றால் மண் நன்றாக உதிரியாக இருக்க வேண்டும். இதனால் மரவள்ளி நடவு செய்யத் தேர்ந்தெடுத்த நிலத்தை 6 முறை உழவு செய்திருக்கிறேன். முதல் உழவுக்கு முன்பு தக்கை பூண்டு விதைத்து அதே நிலத்தில் மடக்கி உழுதேன். பிறகு 10 நாட்கள் இடைவெளியில் ஐந்து கலப்பை முறையில் அதாவது அந்த கலப்பையில் உழுதால் நன்கு ஆழமாக மண்ணைத் தோண்டும். அப்படி மண்ணை உதிரியாக்கி பிறகு, உயிர் உரங்கள் கொடுக்கும்போது அடுத்தடுத்த உழவைத் தொடங்கினேன். கடைசியாக நிலத்தை மட்டப்படுத்தும்போது இரண்டு முறை உழுது நன்றாக தண்ணீர் விட்டு பாத்திகளை தயார்செய்து அதன்மீதுதான் குச்சிகளை நடவு செய்தேன்.

மரவள்ளி குச்சிகளை நடவு செய்யும்போது நிலம் முழுக்க நிறைய தண்ணீர் விட்டு முழுவதும் ஈரமாக இருக்க வேண்டும். ஈரமாக இருக்கிற மண்ணில் குச்சிகளை வைத்து அழுத்தினாலே போதுமானது. நடவுக்கு தேர்ந்தெடுக்கிற குச்சியானது 4 இன்ச் இருக்க வேண்டும். மண்ணுக்கு அடியில் இரண்டு அங்குலம், மண்ணுக்கு மேலே இரண்டு அங்குலம் என இருக்கும்படி நடவு செய்ய வேண்டும். அதாவது ஒரு குச்சியில் 6 பருக்கள் இருத்தல் அவசியம். மரவள்ளியை பொருத்தவரை 3 அடிக்கு ஒரு குச்சி என்கிற விகிதத்தில் நட வேண்டும். அப்படி நட்டு வந்தால் ஒரு ஏக்கருக்கு 4000 குச்சிகள் வரை தேவைப்படும். ஆனால், எனது நிலத்தில் இரண்டரை அடிக்கு ஒரு குச்சி வீதம் நடவு செய்திருக்கிறேன்.

இதனால் எனது ஒரு ஏக்கருக்கு 5700 குச்சிகள் தேவைப்பட்டது. எங்கள் பகுதி களிமண் நிலம் என்பதால் அதிக இடைவெளியில் நடவு செய்தால் வேருக்கு தண்ணீர் செல்லாமல் வேர் அழுகல் நோய் வர வாய்ப்பு இருக்கிறது. அதனால் அரை அடி குறைவாக நடவு செய்திருக்கிறேன். குச்சி பெரிதாக இல்லாமல் 2 அங்குல அளவு மட்டும் வெளியே இருக்கும்படி நடவு செய்தால்தான் குச்சி ஆடாமல் இருக்கும். அப்படி இருந்தால்தான் வேர் பிடித்து வளரும். நடவு செய்த 4வது நாளில் நிலத்தில் ஈரப்பதம் இருந்தாலும் கட்டாயம் தண்ணீர் கொடுக்க வேண்டும். பிறகு 10வது நாளில் அடுத்த தண்ணீர். அதாவது, நடவு செய்து முடித்தவுடன் முதல் 20 நாட்களில் 3 முறை தண்ணீர் கொடுக்க வேண்டும். அதற்கு அடுத்தபடியாக ஈரம் பார்த்து கொடுத்தால் நல்லது. முதல் மூன்று மாதம் மரவள்ளிக்கு கட்டாய பராமரிப்புத் தேவை. களை பிடுங்குவதில் இருந்து உரம் தெளிப்பது, சரியான நேரத்தில் நீர் கொடுப்பது என அனைத்தும் தெளிவாக இருக்க வேண்டும். நடவு செய்து 25வது நாளில் முதல் உரம் கொடுக்க வேண்டும்.

அது வளர்ச்சி ஊக்கியாக இருக்க வேண்டும். அடுத்த 4வது மாதத்தில் கலப்பு உரங்களை கொடுக்க வேண்டும். அதற்கடுத்து 7வது மாதம் பொட்டாஷ் மற்றும் அம்மோனியம் சல்பேட் இரண்டையும் ஒரு மூட்டை வாங்கி கலந்து ஒரு ஏக்கர் மரவள்ளிக்கு கொடுக்க வேண்டும். மொத்தமாகவே இந்த மூன்று உரங்கள்தான். இது கொடுத்தாலே மரவள்ளி வேர் பெருத்து நன்றாக வளரும்.இந்தக் கருப்பு தாய்லாந்து ரக மரவள்ளியைத் தமிழ்நாட்டில் சில இடங்களில்தான் பயிரிடுகிறார்கள். இந்த ரகம் விளைச்சல் அதிகமாக கொடுப்பது மட்டும் இல்லாமல், மாவு சத்து அதிகம் கொண்டதாகவும் இருக்கிறது. பெரும்பாலும் பல இடங்களில் வெள்ளை தாய்லாந்து ரக மரவள்ளியைத்தான் பயிரிடுகிறார்கள். அந்த ரக மரவள்ளி சாப்பிடக்கூடியது. ஆனால், ஜவ்வரிசி, மைதா தயாரிக்கும் மில்லுக்கு மொத்தமாக கொடுக்கும்போது வெள்ளை தாய்லாந்து ரக கிழங்குகளில் மாவுச்சத்து குறைவாக இருப்பதால் வாங்க மறுக்கிறார்கள். குறைந்த பணம் கொடுத்துதான் வாங்குகிறார்கள். ஆனால், நமது நிலத்தில் நடவு செய்யப்பட்டிருக்கிற கருப்பு தாய்லாந்து ரக மரவள்ளி சாப்பிடுவதற்கு மட்டும் செல்லாமல் ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படுகிற சேகோ மில்லிற்கும் ஆர்வத்தோடு வாங்கிச் செல்கிறார்கள்.

இதனால் விளைச்சலும் விற்பனையும் நல்ல முறையில் இருக்கும். மரவள்ளியானது நடவு செய்து 8 மாதத்தில் அறுவடைக்குத் தயாராகிவிடும். கூடுதல் நாட்கள் கழித்து அறுவடை செய்தாலும் கூடுதல் விளைச்சல் கிடைக்கும். எனது நிலத்தில் இன்னும் ஒரு வாரத்தில் அறுவடை செய்யப் போகிறேன். சராசரியாக 15ல் இருந்து 20 டன் வரை மகசூல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் நட்ட குச்சிகளில் கழிவுக் குச்சி என எதுவும் இல்லாமல் அனைத்திலுமே கிழங்கு வந்திருக்கிறது. எதிர் பார்த்ததுபடி விளைச்சல் வந்தால் ஒரு டன் கிழங்கிற்கு செலவுகள் போக தற்போதைய விலையில் 12 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். குறைந்தபட்சமாக 15 டன் கிடைத்தால் கூட ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் லாபமாக கிடைக்கும்’’ என மகிழ்ச்சி பொங்க கூறும் யுவராஜா, “கிழங்கு அறுவடை முடிந்தவுடன் யார் வேண்டுமானாலும் எனது நிலத்திற்கு வந்து எனது மரவள்ளிக் குச்சிகளை எடுத்து அவர்களது நிலத்தில் பயிரிட்டு பயன்பெறலாம்’’ என வாஞ்சையுடன் அழைக்கிறார்.
தொடர்புக்கு:
யுவராஜா: 98651 31793

புதுவரவு

சங்ககிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏத்தாப்பூர், வெள்ளை தாய்லாந்து போன்ற ரகங்கள்தான் பரவலாக பயிரிடப்படுகிறது. இப்போதுதான் இந்த கருப்பு தாய்லாந்து ரகத்தைப் பயிரிடத் தொடங்கி இருக்கிறார்கள். இதுகுறித்து யுவராஜா தெரிவிக்கையில், “இந்தப் பகுதியில் பரவலாக ஏத்தாப்பூர் ரகம், முள்ளுவாடி, வெள்ளை தாய்லாந்து, குலராமன், குங்கும ரோஸ் போன்ற ரகங்கள்தான் பயிரிடப்பட்டு வருகிறது. இப்போதுதான் இந்த கருப்பு தாய்லாந்து ரகம் பயிரிடப்படுகிறது. இந்த ரகத்தில் விளைகிற அனைத்து கிழங்குமே ஒரே அளவில் பெரியதாக இருக்கும். எனது நிலத்தில் ஒரு செடியில் அதிகபட்சமாக 9 கிலோ வரை விளைந்திருக்கிறது. சரியான நேரத்தில் உரம், தண்ணீர் முறையான கவனிப்பு கொடுத்து வந்தால் ஒரு ஏக்கருக்கு 20 டன் கிழங்குகளுக்கு மேல் விளைச்சல் எடுக்கலாம் என்கிறார் யுவராஜா.

You may also like

Leave a Comment

ten + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi