கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்னை, வாழை, ரப்பர் போன்ற பயிர்களே அதிகளவில் பயிரிடப்பட்டுவருகின்றன. மிக குறைந்த அளவிலேயே நெல் சாகுபடி நடக்கிறது. அதிலும் பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடப்படும் வயல்கள் மிகவும் அரிதாகவே காணப்படும். இந்த நிலையில் பறக்கை அருகே உள்ள தாமரைக்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தனது 2 ஏக்கர் நிலத்தில் பொன்மணி மற்றும் அம்பை 16 ரக நெல்லைப் பயிரிட்டுவருகிறார். இதுதவிர 60 சென்ட் நிலத்தில் பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டுவருகிறார். தற்போது அவர் கருப்புக்கவுனி நெல்லை சாகுபடி செய்திருக்கிறார். ஒரு காலைப்பொழுதில் ஆறுமுகத்தை சந்தித்தோம். “அருகில் உள்ள பறக்கை பகுதியில் எனக்கு 2.60 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் 2 ஏக்கரில் ஜூன், ஜூலை மாதம் தொடங்கும் கன்னிப்பூ சாகுபடியின்போது அம்பை 16 ரக நெல்லை சாகுபடி செய்வேன். செப்டம்பர், அக்டோபர் மாதம் தொடங்கும் கும்பப்பூ சாகுபடியின்போது பொன்மணி ரக நெல்லைப் பயிரிடுவேன். இந்தப் பயிர்களுக்கு ரசாயன உரங்களைப் பயன்படுத்துகிறேன். அறுவடையில் கிடைக்கும் நெல்லை அன்றைய விலைக்கு விற்பனை செய்துவிடுவேன். இதுபோக மீதமுள்ள 60 சென்ட் நிலத்தில் பாரம்பரிய ரக நெல்லைப் பயிரிட்டுவருகிறேன். கன்னிப்பூ சாகுபடியின்போது கட்டிச்சம்பா சாகுபடி செய்வேன். கும்பப்பூ சாகுபடியின்போது பொன்மணி பயிரிடுவேன்.
பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்யும்போது ரசாயன உரங்கள் பயன்படுத்த மாட்டோம். இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறேன். பாரம்பரிய நெல் அறுவடை ெசய்யும்போது வீட்டிற்கு தேவையான நெல்லை எடுத்துக்கொண்டு மீதமுள்ள நெல்லை விற்பனை செய்கிறேன். எனக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு சர்க்கரை நோய் வந்தது. சோதனை செய்த டாக்டர்கள் மாத்திரை சாப்பிட வலியுறுத்தினார்கள். ஆனால் மாத்திரை சாப்பிட எனக்கு விருப்பம் இல்லை. அப்போது விவசாய நண்பர்கள் சிலர் பாரம்பரிய அரிசி சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாடாக இருக்கும் என தெரிவித்தனர். அப்போது நானும் பாரம்பரிய அரிசிதான் சாப்பிடுகிறேன் எனக் கூறினேன். அதற்கு அவர்கள் கருப்புக்கவுனி என்னும் பாரம்பரிய நெல்லைப் பயன்படுத்தி பார்க்குமாறு ஆலோசனை கூறினர். அதன்படி கருப்புக்கவுனி அரிசியை மார்க்கெட்டில் வாங்கி சாப்பிடத் தொடங்கினேன். கருப்புக்கவுனி சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வந்திருக்கிறது. தற்போது மார்க்கெட்டில் ஒரு கிலோ கருப்புக்கவுனி அரிசி ரூ.340க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனை நான் வாங்கி பயன்படுத்தி வருகிறேன். கருப்புக்கவுனி அரிசியை அதிக விலை கொடுத்து வாங்கும் நாம் நமது நிலத்தில் அதை விளைவிக்கலாம் என முடிவு செய்தேன். இதற்காக தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியிடம் ஒரு கிலோ கருப்புக்கவுனி விதை நெல் ரூ.200 என்ற விலையில் 12 கிலோ வாங்கினேன். அதை விதைநேர்த்தி செய்து நாற்றங்கால் தயாரித்தேன்.
நாற்றங்காலில் 16 நாட்களில் இருந்து 24 நாட்களுக்குள் நாற்றுகளைப் பறித்து நடவு வயலில் நட வேண்டும். ஆனால் நாங்கள் நாற்றங்கால் தயாரிக்கும்போது போதிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் நாற்றங்கால் அமைத்து 50 நாட்கள் கடந்த பிறகு, நாற்றுகளைப் பிடுங்கி நடவு செய்தேன். நடவுப்பணியைத் தொடங்குவதற்கு முன்பு வேப்பிலைகளை வயலில் இட்டு, தழைச்சத்தைப் பெருக்கினோம். அதன்பிறகு நடவு செய்தோம். 10 நாட்களில் களை அதிக அளவு வளரும். ஆட்களை வைத்து களையை அகற்றும்போது கூலி அதிகமாகும். இதனால் ரசாயனக் களைக்கொல்லியை மட்டும் நான் பயன்படுத்திவருகிறேன். 20 நாட்கள் கடந்த பிறகு 20 கிலோ வேப்பம்புண்ணாக்கு, 15 கிலோ பயோ பொட்டாஷ் ஆகியவற்றை உரமாகப் போட்டேன். அதன்பிறகு உரம் போடவில்லை. தற்போது பயிர்களில் கதிர் வந்திருக்கிறது. இன்னும் இரு தினங்களில் அறுவடைப் பணி தொடங்கிவிடும். மகசூலாக கிடைக்கும் நெல்லை அரிசி யாக்கி, எனது வீட்டுத் தேவைக்குப் போக மீதமுள்ள அரிசியை விற்பனை செய்ய முடிவு செய்திருக்கிறேன். திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கருப்புக்கவுனி சாகுபடி அதிகளவில் நடக்கிறது. ஆனால் குமரி மாவட்டத்தில் தற்போதுதான் கருப்புக்கவுனி சாகுபடி தொடங்கி இருக்கிறது. இதனால் எங்கள் வயல் பகுதி வழியாக செல்லும் பல விவசாயிகள் கருப்பு நிறத்தில் இருக்கும் எங்களது நெல் மணியை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கிறார்கள்’’ என மகிழ்வுடன் பேசி முடித்தார்.
தொடர்புக்கு:
ஆறுமுகம்: 94860 11688.
ஒரு கோட்டை ரூ.4 ஆயிரம் ஆறுமுகம் விளைவிக்கும் பாரம்பரிய நெல்லை வாங்கிச் செல்ல சில ரெகுலர் கஸ்டமர்கள் இருக்கிறார்கள். மற்ற ரக நெல் ஒரு கோட்டை (86 கிலோ) ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை ஆகும். இவர் விளைவிக்கும் பாரம்பரிய நெல் ரகம் ஒரு கோட்டை ரூ.4 ஆயிரம் என விற்கப்படுகிறது. இதனால் 2 மடங்கு விலை கிடைக்கிறது.