தாம்பரம்: சென்னை வால்டாக்ஸ் சாலையை சேர்ந்தவர் ரவிக்குமார் (50). இவர், தனது மனைவி குணசுந்தரியுடன் (48), இருசக்கர வாகனத்தில் தாம்பரத்தில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தார். நிகழ்ச்சி முடிந்ததும், மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் ஜிஎஸ்டி சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
குரோம்பேட்டை பேருந்து நிறுத்தம் முன்பு உள்ள சிக்னல் அருகே சென்றபோது, பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், அங்கு பணியில் இருந்த போலீசார் கண் முன்னே குணசுந்தரி கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பினார்.இதனால் அதிர்ச்சியடைந்த ரவிக்குமார் மற்றும் குணசுந்தரி ஆகியோர் சம்பவம் குறித்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார் சிக்னல் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.பட்டப்பகலில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஜிஎஸ்டி சாலையில் போலீசாரின் கண் முன்னே மர்ம நபர் ஒருவர் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.