சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் அக்டோபர் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுக்க நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணம் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சில நாட்கள் நடைபயணம் நிறுத்தப்பட்டு மூன்றாவது கட்டமாக அக்டோபர் 4ம் தேதி மீண்டும் துவங்க இருந்தது. இதையடுத்து, அண்ணாமலையின் மூன்றாம் கட்ட நடைபயணம் வரும் 6ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
6ம் தேதி மீண்டும் தொடர்வதாக இருந்த நடைபயணத்தை உடல்நல பாதிப்பு காரணமாக 15ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். உடல் சோர்வு, இருமல் மற்றும் தொண்டை வலி பிரச்சனை உள்ளதால் ஓய்வு எடுக்குமாறு அண்ணாமலையை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மூச்சு விடுவதில் சிரமம் உள்ளதாலும் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அண்ணாமலையை மேலும் 2 வாரங்கள் ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உடல் நலக்குறைவு காரணமாக ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடுத்து நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நாளை காலை மாவட்ட தலைவர்கள் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் பாஜக தலைமை அறிவித்துள்ளது. செப்டம்பர் இறுதியில் கோவையில் தொடங்கவிருந்த நடைபயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.