Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பள்ளி மாணவி பலாத்காரம் பாஜ மாநில நிர்வாகி கைது: போக்சோ வழக்கில் சிறையில் அடைப்பு

மதுரை: மதுரையில் 15 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பாஜ மாநில நிர்வாகி போக்சோவில் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்ததாக சிறுமியின் தாயும் போலீசாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். மதுரை எஸ்எஸ் காலனியைச் சேர்ந்தவர் எம்.எஸ்.ஷா. திருமங்கலத்தில் உள்ள பிரபல கல்லூரியின் தலைவராகவும், பாஜவின் மாநில பொருளாதார தலைவராகவும் பதவி வகிக்கிறார். இவர் அதிமுகவில் இருந்த போது மாநகராட்சி கவுன்சிலராகவும் இருந்தார். இவர் மீது 15 வயதுடைய பள்ளி மாணவியின் தந்தை மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், ‘‘எனது மகளின் செல்போன் எண்ணிற்கு சில தினங்களாக ஆபாசமான உரையாடல்கள் அடிக்கடி வந்தன. அவரது செல்போனை வாங்கி பார்த்தபோது, பாஜ பொருளாதார பிரிவு மாநிலத் தலைவர் எம்.எஸ்.ஷாவின் செல்போனிலிருந்து எனது மகளுக்கு ஆபாச குறுஞ்செய்திகள், உரையாடல்கள் வந்திருப்பது தெரிந்தது. அதுகுறித்து, மகள் மற்றும் மனைவியிடம் விசாரித்தேன். அதில், எனது மனைவிக்கும், எம்.எஸ்.ஷாவிற்கும் நீண்ட நாட்களாக தகாத உறவு இருந்து வந்துள்ளது. முதலில் என் மனைவியோடு தொடர்பு வைத்துக் கொண்ட அவர், எங்களின் கடனை அடைத்துவிட்டு தேவையான உதவிகளை செய்வதாக கூறி, எனது மகளையும் அவரது ஆசைக்கு இணங்க வைக்குமாறு மனைவியிடம் கேட்டுள்ளார். அவரது பேச்சை நம்பிய என் மனைவியும், அடிக்கடி சொகுசு விடுதிகளுக்கு என் மகளை அழைத்து சென்று வந்துள்ளார்.

அப்போது, என் மகளுக்கு டூவீலர் வாங்கித் தருவதாகவும், தான் கூப்பிடும்போதெல்லாம் வர வேண்டுமெனக் கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக தெரிகிறது. எனவே, எம்.எஸ்.ஷா மீதும், உடந்தையாக இருந்த என் மனைவி மீதும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறி இருப்பதாக தெரிகிறது. இதன்பேரில், எம்.எஸ்.ஷா மற்றும் மாணவியின் தாய் ஆகிய இருவர் மீதும் மதுரை தெற்கு அனைத்து மகளிர் போக்சோ சிறப்பு சட்டம் பாலியல் சீண்டலில் ஈடுபடுதல் 11(1), நேடியாகவோ, சமூக ஊடகம் மூலமாகவோ பாலியல் நோக்கில் பின்தொடர்வது 11(4), பாலியல் ரீதியான 3 ஆண்டு தண்டனைக்குரிய குற்றமான பிரிவு 12 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை முன்பு விசாரித்த இன்ஸ்பெக்டர், எம்.எஸ்.ஷா மீதான குற்றச்சாட்டில் போதுமான முகாந்திரம் இல்லையெனக் கூறி வழக்கை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து சிறுமியின் தந்தை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் முறையிட்டார். இதனால் இந்த வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் தற்போதைய தெற்கு மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் தீபா விசாரணை நடத்தினார்.

குற்றம்சாட்டப்பட்ட எம்.எஸ்.ஷாவின் செல்போனில் வாட்ஸ் அப் உரையாடல்கள் மற்றும் குறுந்தகவல்கள் உள்ளிட்டவற்றை இன்ஸ்பெக்டர் தீபா ஆய்வு செய்தார். அப்போது அவரது செல்போனில் இருந்து ஆபாசமாக அனுப்பிய படங்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப ஆதாரங்கள் சிக்கியது. இதன் மூலம் பாஜ மாநில நிர்வாகி 15 வயது சிறுமிக்கு செக்ஸ் டார்ச்சர் செய்ததற்கான முகாந்திரம் இருப்பது உறுதியானது. இதற்கு உடந்தையாக சிறுமியின் தாயார் செயல்பட்டு வந்ததையும் இன்ஸ்பெக்டர் தீபா உறுதி செய்துள்ளார். இதையடுத்து பாஜ மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா மற்றும் சிறுமியின் தாயார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். இதில், ஏற்கனவே இருந்த சட்டப்பிரிவுகளுடன் கூடுதலாக போக்சோ சட்டத்தின் 17வது பிரிவான குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல் ஆகிய பிரிவையும் சேர்த்து இருவரையும் தெற்கு மகளிர் போலீசார் நேற்று கைது செய்தனர். இருவரையும் மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையை முடித்து, மதுரை ஜேஎம் முதலாவது நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பி.முத்துலட்சுமி முன் ஆஜர்படுத்தினர். இருவரையும் வரும் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதன்பின்னர் இருவரும் மதுரை மத்திய சிறையில் உள்ள ஆண்கள், பெண்கள் பிரிவில் அடைத்தனர்.