துரைப்பாக்கம்: காரப்பாக்கம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான பெரிய கேணி குளத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பு செய்து சுற்றுச்சுவர் அமைக்கும் 198வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுந்தரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை மாநகராட்சி, 15வது மண்டலம், 198வது வார்டுக்கு உட்பட்ட காரப்பாக்கம் பகுதியில், சர்வே எண்:89ல் மூன்று ஏக்கர் பரப்பளவில் பெரிய கேணி குளம் உள்ளது. இக்குளம், அப்பகுதியில் உள்ள மக்களுக்கு நீராதாரமாக விளங்கி வருகிறது. மேலும், மழைக்காலங்களில், அப்பகுதிகளில் தேங்கும் மழைநீர் வடிகால் மூலம் குளத்தில் சேமிக்கப்படுகிறது. இவ்வாறு, அப்பகுதி மக்களின் நீராதாரமாக விளங்கும், இக்குளத்தின் ஒரு பகுதியை 198வது வார்டு மாமன்ற உறுப்பினரும், பாஜ ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணை தலைவருமான சுந்தரம் ஆக்கிரமிப்பு செய்து சுற்றுச்சுவர் அமைப்பதாக, அப்பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று முன்தினம் சோழிங்கநல்லூர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், கிராம நிர்வாக அலுவலர் இளங்கோ மற்றும் ஊழியர்கள், சம்பவத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இதுகுறித்து உயர் அதிகாரியிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதனையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதால், அரசுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து விற்று வருகின்றனர். சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட காரப்பாக்கம் பகுதியில் சர்வே எண்:89ல் உள்ள பெரியகேணி குளத்தின் ஒரு பகுதியை 198வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுந்தரம் ஆக்கிரமிப்பு செய்து, சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் இக்குளத்தின் ஒரு பகுதியை தனியார் நிலத்திற்கு செல்வதற்காக ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைத்து கொடுத்துள்ளனர். மேலும், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி இதேபோன்று குளத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்ட முயற்சித்தபோது, நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,’’ என்றனர்.