மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் மேட்ச் பிக்சிங் நடந்ததாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பாஜ தலைவர்கள் பலரும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தனர். இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியிருப்பதாவது: தேர்தல் ஆணையத்தின் சார்பாக பாஜ தலைவர்கள் பதிலளிக்கின்றனர். இது கவலை அளிக்கிறது. தேர்தலில் மேட்ச் பிக்சிங் நடந்ததை இது உறுதிப்படுத்துகிறது. ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு நியாயமாக தேர்தல் ஆணையம்தான் பதிலளித்திருக்க வேண்டும்.
சட்டப்பேரவை தேர்தல்களில் நடக்கும் சில சம்பவங்கள் தற்செயலானவை அல்ல, அவை கவனமாக திட்டமிடப்பட்ட நடவடிக்கை. அரியானா சட்டப்பேரவை தேர்தல்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட சண்டிகர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போது, ஒன்றிய பாஜ அரசு தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் விதிகளை மாற்றி அந்த தகவலை வெளியிட விடாமல் தடுத்தது ஏன்? மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தலில் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் அமோக வெற்றி பெற்றன. அடுத்த 5 மாதத்தில் எப்படி முடிவுகள் மாறின. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.