புதுடெல்லி; அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் 330 தொகுதிகளில் பா.ஜ வெற்றி பெறுவது உறுதி என்று ஒன்றிய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்தார். டெல்லியில் நடந்த இந்திய பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியதாவது: கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 இடங்களில் பாஜ 303 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை நான் 330 இடங்கள் பாஜவுக்கு கிடைக்கும் என்று கூறுவேன். வரும் தேர்தலில் இந்தியாவின் 7,000 ஆண்டுகால பெருமையை மக்கள் மீட்டெடுப்பார்கள். கர்நாடகா தேர்தலில் பாஜ தோல்வியடைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இல்லையெனில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவார்கள். ராகுல் காந்தி “பாசாங்கு செய்பவர்”.ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் “பொய்யர்”.எனவே மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல், கெஜ்ரிவால் அல்லது மம்தா பானர்ஜி போன்ற தலைவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு ஒரு சதவீதம் மட்டுமே உள்ளது. இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு 7.2 சதவிகிதம் என்ற விகிதத்தில் தொடர்ந்து வளர்ச்சியடைந்தால், மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்கும் முன்பே, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.