புதுடெல்லி: 5 மாநில வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வதற்காக நேற்று நள்ளிரவு வரை பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மத்திய பிரதேசம், தெலங்கானா, சட்டீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ளதால், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. டெல்லியில் பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நேற்றிரவு தொடங்கிய நிலையில் நள்ளிரவு வரை நீடித்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், 5 மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டன. 119 உறுப்பினர்களைக் கொண்ட தெலங்கானா சட்டசபைக்கு நவம்பர் 30ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
200 உறுப்பினர்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு நவம்பர் 25ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால், 3 ஒன்றிய அமைச்சர்கள் உட்பட 7 எம்பிக்களுடன் சேர்த்து 41 வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சி அறிவித்தது. மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கு 136 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விரைவில் 5 மாநிலங்களுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் என்றும், ராஜஸ்தானில் போட்டியிடும் 84 வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டதாகவும், இன்று அவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. ஏற்கனவே ராஜஸ்தானில் 41 வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.